மைக்ரோசாப்ட் ஆபீஸ் டிப்ஸ் ! - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Wednesday, June 8, 2011

மைக்ரோசாப்ட் ஆபீஸ் டிப்ஸ் !

 


வேர்ட் டிப்ஸ்  . . . . .

டயலாக் பாக்ஸ் தாமதமாகிறதா?
வேர்ட் தொகுப்புகளைப் பயன் படுத்துபவர்கள், சில ஆண்டுகளில் தங்களிடம் உள்ள வேர்ட் புரோகிராமில், டயலாக் பாக்ஸ் தோன்ற சிறிது நேரம் கூடுதலாக எடுத்துக் கொள்வதனைக் காணலாம். எடுத்துக்காட்டாக சொற்களைத் தேடி அறிய Find and Replace டயலாக் பாக்ஸ் கிடைக்க கண்ட்ரோல் + எப் அழுத்துவோம். இந்த பாக்ஸ் கிடைக்க 15 முதல் 20 விநாடிகள் கூடுதல் நேரம் ஆகலாம். இது போன்ற பிரச்னைகளை நாமே தீர்த்து வைக்கலாம்.
இந்த பிரச்னை வேர்ட் தொகுப்பால் ஏற்படுவதில்லை. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினால் ஏற்படுகிறது. பெரும்பாலும் இந்த பிரச்னைக்கு, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க் தான் காரணமாக இருக்கும். இதற்கும் ஹார்ட் ட்ரைவிற்கும் என்ன தொடர்பு இருக்கும்? என்ற கேள்வி எழுகிறதா?

விண்டோஸ் தன் செயல்பாடுகளுக்கு ஹார்ட் ட்ரவையே சார்ந்துள்ளது. உங்கள் கம்ப்யூட்டரில் ராம் மெமரி அதிகம் இல்லாத போது, விண்டோஸ் மெமரிக்கும் ஹார்ட் ட்ரைவிற்கும் இடையே தகவல்களை மாற்றிக் கொள்ளும். ஹார்ட் ட்ரைவ் வேறு பல காரணங்களினால், தகவல்களை மாற்றிக் கொள்வதில் நேரம் எடுத்துக் கொண்டால், அது வேர்ட் போன்ற புரோகிராம்கள் இயக்கத்தில் எதிரொலிக்கிறது.

இதற்குத் தீர்வு தான் என்ன? ஹார்ட் டிஸ்க்கினை (defrag) டிபிராக் செய்திடலாம். இதனால் பைல்கள் ஒழுங்கான முறையில் ஹார்ட் டிஸ்க்கில் அடுக்கப்பட்டு, தகவல்கள் பரிமாறப்பட வழி கிடைக்கும்.

ஒரே நேரத்தில் பல புரோகிராம்களை இயக்கும் போதும் இந்த பிரச்னை ஏற்படலாம். அனைத்து புரோகிராம்களும் கம்ப்யூட்டரின் திறனையும், மெமரியின் இடத்தையும் பங்கிட்டுக் கொள்வதால், வேர்ட் இயங்க அதற்கான திறன் கிடைக்காமல் இருக்கலாம். இந்த இயங்கும் புரோகிராம்கள் டாஸ்க்பாரில் காட்டப்படுகின்றன. அவற்றைப் பார்த்து, அப்போது நீங்கள் அதிகம் பயன்படுத்தாத புரோகிராம்களைத் தற்காலிகமாவது மூடி வைக்கலாம்.
மேலே குறிப்பிட்டவை மூலமும், உங்கள் வேர்ட் பிரச்னை தீரவில்லை என்றால், உங்கள் சிஸ்டத்தில் உங்களால் காண முடியாத பிரச்னை ஏதோ இருக்கிறது என்று தெரிகிறது. இது வைரஸ், மால்வேர் போன்றவற்றினாலும் ஏற்படலாம். இத்தகைய கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களும், கம்ப்யூட்டரின் திறனைப் பெருமளவில் திருடிக் கொள்வதால், மற்ற புரோகிராம்கள் இயங்குவதற்குத் தேவையான திறன் கிடைக்காமல் இருக்கலாம். இவற்றை நல்லதொரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் கொண்டு நீக்க வேண்டும்.

பக்கத்தில் கர்சர் நகர்த்தல்:-




வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கர்சரை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் திரையின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல எண்ணு கிறீர்கள். அதாவது திரையில் தெரியும் டெக்ஸ்ட் ஸ்கிரீன் நகரக் கூடாது. தெரிகின்ற வாக்கியங்களில் முதல் வாக்கியத்திற்குச் செல்ல வேண்டும். என்ன செய்திடலாம்? Home அழுத்தினால் வரியின் தொடக்கத் திற்கு மட்டுமே செல்லும். Ctrl + Home அழுத்தினால் அந்த ஆவணத்தின் தொடக்கத்திற்குச் செல் லும். திரையில் தெரியும் முதல் வாக்கியத்தின் தொடக்கத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழுத்திப் பாருங்கள். அதே போல் திரையில் தெரியும் பக்கத்தின் கீழ்ப்பாகத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Down அழுத்தவும். வேர்ட் டாகுமெண்ட்டில் வேகமாக நினைத்த இடத்திற்கு நீந்திச் செல்ல விரல் நுனியில் உள்ள சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டீர்களா!

பாரா நகர்த்தல்:-
சில வேளைகளில் நாம் உருவாக்கும் வேர்ட் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு முழு பாராவை டாகுமெண்ட்டின் வேறு இடத்தில் அமைக்க விரும்புவோம். இதற்கு காப்பி அல்லது கட் மற்றும் பேஸ்ட் கட்டளை எல்லாம் வேண்டாம். எந்த பாராவினை நகர்த்த வேண்டுமோ அதனுள்ளாக கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும். பின் ஷிப்ட் மற்றும் ஆல்ட் கீகளை அழுத்தியவாறு அப் ஆரோ அல்லது டவுண் ஆரோவினை அழுத்தினால் பாரா மேலே கீழே முழுதாகச் செல்லும்.

டாகுமெண்ட் செலக்ஷன்:-
வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட் முழுவதையும் ஒரே மவுஸ் கிளிக்கில் தேர்ந்தெடுக்கலாம். இதற்கு மவுஸ் பாய்ண்ட்டரை இடது பக்கம் உள்ள மார்ஜின் ஓரத்திற்குக் கொண்டு செல்லவும். அது வலது பக்கம் சற்று சாய்ந்த மேல் நோக்கிய அம்புக் குறியாக மாறும். உடன் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொள்ளுங்கள். பின் இடது மவுஸ் பட்டனை அழுத்துங்கள். டாகுமெண்ட் முழுவதும், அது எத்தனை பக்கங்களாக இருந்தாலும் உடனே செலக்ட் செய்யப்படும்.

இதனை இன்னொரு வழியிலும் நிறைவேற்றலாம். அம்புக் குறியை இடது ஓரத்திற்குக் கொண்டு சென்றவுடன் மூன்று முறை இடது மவுஸ் கிளிக் செய்திடவும். டாகுமெண்ட் முழுவதும் செலக்ட் ஆகி நிற்கும்.

டயலாக் பாக்ஸ்கள் திறக்க:-
டேப்ஸ் டயலாக் பாக்ஸ் வேண்டுமா? மேலே உள்ள ரூலர் அருகே கர்சரைக் கொண்டு சென்று ரூலரின் கீழாக கர்சரை அமைத்து டபுள் கிளிக் செய்தால் டேப் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அப்போது ஒரு டேப் மார்க் ஒன்று உண்டாகும் .இதனை நீக்க வேண்டும் என எண்ணினால் டேப் டயலாக் பாக்ஸில் அதனைச் செய்யலாம்; அல்லது அதன் மீது கர்சரை வைத்து மேலே இழுத்துச் சென்று விடலாம்.

உடனே இடது பக்கம் ரூலரில் இது போல செய்தால் என்ன நடக்கும் என்று பார்க்க ஆசையாய் இருக்குமே! இடது பக்கம் ரூலரில் மேலே சுட்டிக் காட்டியது போல் செய்தால் பேஜ் செட் அப் பாக்ஸ் கிடைக்கும்.

விருப்பமான இடத்தில் மெனு பட்டன்கள்:-
நாம் அன்றாடம் வேர்ட் தொகுப்பைப் பயன்படுத்துகிறோம். அதில் மேலாக உள்ள மெனு பட்டன்களை அவற்றின் வழக்கமான இடங்களில் வைத்துப் பார்த்து தேர்தெடுக் கிறோம். சில வேளைகளில் இவை இடம் மாறி, வேறு ஒரு இடத்தில் இருந்தால் நல்லது என்று எண்ணுவோம். ஆனால் அதற்கு என்ன செய்வது என்று எண்ணாமல் விட்டுவிடுவோம். இதற்கான வழியை இங்கு காண்போம்.

இதற்கு முதலில் Alt கீயை அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள். இனி நீங்கள் இடம் மாற்ற விரும்பும் மெனு பட்டனை உங்கள் மவுஸால் கிளிக் செய்து அப்படியே இழுத்து நீங்கள் விரும்பும் புதிய இடத்திற்குச் செல்லுங்கள். அப்போது பாய்ண்ட்டர் ஒரு நான்கு முனை சக்கர அம்பாக மாறி இருப்பதனைப் பார்ப்பீர்கள். புதிய இடத்திற்குச் சென்றவுடன் மவுஸை விட்டு விடுங்கள். நீங்கள் விரும்பிய வகையில் மெனு பாரில் பட்டன்கள் அமைந்திருக்கும்.

டேபிளில் வரிசையாக எண்களை அமைக்க:-




வேர்ட் தொகுப்பில் டேபிள் ஒன்றை உருவாக்கி இருக்கிறீர்கள். அதில் உள்ள செல்களில் வரிசையாக எண்களை அமைக்க வேண்டும். என்ன செய்யலாம்? வரிசையாக 1,2,3, என டைப் செய்து கொண்டு போவீர்கள், இல்லையா? தேவையே இல்லை. எந்த நெட்டு வரிசையில் எண்கள் அமைய வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து பின் புல்லட் அருகே உள்ள Numbering என்ற ஐகானை அழுத்தவும். வரிசையாக எண்கள் அமைக்கப்படும். ஆனால் செல்களில் உள்ள டெக்ஸ்ட் அமைத்து அதில் என்டர் தட்டி வரிசையாக டெக்ஸ்ட் அமைத்திருந்தால் எண்கள் சற்று தாறுமாறாக வரலாம்.

டேபிளில் பார்டர்களை நீக்க:-
வேர்டில் டாகுமெண்ட் இடையே டேபிள் ஒன்றை உருவாக்கும்போது, வேர்ட் அந்த டேபிளில் பார்டர் கோடுகளை நீங்கள் விரும்புகிறீர்கள் என்றபடி கோடுகளை செல்களைச் சுற்றிலும் அமைத்துத் தரும். ஏதேனும் காரணத்தினால் இந்த கோடுகள் உங்களுக்குத் தேவையில்லை என்று எண்ணினால் அதனை நீக்கலாம். இதற்கான பல வழிகளில் எளிய வழி ஒன்று உள்ளது. கண்ட்ரோல் + ஆல்ட் +யு (Ctrl+Alt+U) கீகளை அழுத்தினால் பார்டர் கோடுகள் நீக்கப்படும். இந்த கீகளை அழுத்தும் முன் கர்சர் ஏதேனும் ஒரு செல்லில் இருக்க வேண்டும்.



எக்ஸெல் டிப்ஸ் . . . . .

பெர்சனல் தகவல்கள் பதிவதைத் தடுக்க:-

எக்ஸெல் தொகுப்பில் புதிய ஒர்க்ஷீட்களை உருவாக்கி, அவற்றில் டேட்டாவினைப் பதிகையில், அந்த ஒர்க்ஷீட் பைலில், நம்முடைய பெர்சனல் தகவல்களும் இணைக்கப்படுகின்றன. பைல் ப்ராப்பர்ட்டீஸ் என்ற வகையில் இவை பதியப்படும். இதனால், பைல் ஒன்றை யார் உருவாக்கியது போன்ற தகவல்கள் அனைவருக்கும் தெரிய வரும். இந்த தகவல்களை ஒவ்வொரு பைலின் ப்ராப்பர்ட்டீஸ் சென்று நீக்கலாம். ஒவ்வொரு பைலாக இதனை மேற்கொள்வதைக் காட்டிலும், ஒர்க்ஷீட்கள் உருவாகும்போது இத்தகைய தகவல்களை இணைக்காமல் இருக்க செட்டிங்ஸ் மேற்கொள்ளலாம். இதற்கு Tools > Options என முதலில் தேர்ந்தெடுக்கவும். இங்கு Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இங்குள்ள டேப்களில் Security டேப்பினைத் தேர்ந்தெடுக் கவும். இப்போது கிடைக்கும் விண்டோ பிரிவில் Remove Personal Information from File Properties on Save என்று இருப்பதைப் பார்த்து, அதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். அடுத்து ஓகே கிளிக் செய்து அனைத்தையும் மூடவும். இனி பெர்சனல் தகவல்கள் சேர்க்கப்பட மாட்டா.

எக்ஸெல் 2007 பயன்படுத்துபவர்கள், கீழே குறிப்பிட்ட வழிகளில் செயல்படவும். இந்த தொகுப்பில் Document Inspector என்று ஒரு வசதியைக் காணலாம். இதன் மூலம் பைல் ஒன்றின் பல தகவல்களைப் பார்க்கலாம். Office பட்டன் கிளிக் செய்து, Prepare | Inspect Document எனச் செல்லவும். இப்போது கிடைக்கும் டாகுமெண்ட் இன்ஸ்பெக்டர் டயலாக் பாக்ஸில், கண்காணிப்பில் இருக்க வேண்டிய விஷயங்களைத் தேர்ந்தெடுத்துப் பின்னர் Inspect என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் ஒர்க் புக்கில் இருக்கும் பெர்சனல் தகவல்களைக் காட்டி, அவற்றில் எவை எல்லாம் இருக்கக் கூடாது என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்படி கேட்கும். அவ்வாறே செயல்படலாம்.

டாலரை ரூபாயாக மாற்ற:-
இது அந்நியச் செலவாணி மாற்றம் குறித்த டிப்ஸ் இல்லை. எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் டாலர் அடையாளத்திற்குப் பதிலாக, ரூபாய் குறித்த சுருக்கு எழுத்துக்கள் அமைக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த குறிப்பாகும். முதலில் எந்த ஒர்க் ஷீட்டில் மாற்ற வேண்டுமோ, அந்த ஒர்க் ஷீட்டினைத் திறந்து கொள்ளுங்கள். பின் Format கிளிக் செய்து அதில் Cells என்ற பிரிவைத் திறந்து கொள்ளுங்கள். பின் கிடைக்கும் Format Cells என்ற விண்டோவில் Category கட்டத்தில் Currency என்பதைத் தேர்ந்தெடுத்தால் அதன் வலது புறம் பல்வேறு கரன்சி வடிவங்கள் தரப்படும். அதில் Rs Urudu என இருக்கும்; அதனைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி அந்த செல்லில் எண்களுக்கு முன் Rs இருக்கும்.

மாதம்,தேதி, நாள் பார்மட்:-
எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் தேதிக்கான பார்மட்டினை அமைக்கையில், எப்படி அமைத்தால் எந்த வகையில் நாட்கள் மற்றும் அதற்கான தேதி எண்கள் காட்டப்படும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏதோ கொடுக்கிறோம். ஆனால் இப்படி வருகிறது, பரவாயில்லை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. இதோ சார்ந்த டிப்ஸ்.

d என்பது ஒரு நாளின் எண்ணைத் தரும் (1, 2, 3, 4 ... 30, 31)
dd என்பது நாளின் எண்ணை இரு இலக்கங்களில் தரும் (01,02,03)
ddd என்பது நாளினைச் சுருக்கித் தரும் (Mon, Tue ....)
dddd என்பது நாளினை அதன் முழு பெயரில் தரும் (Monday, Tuesday, etc).

மாதத்திற்கான குறிப்புகள்:-




m என்பது ஒரு மாதத்தின் எண்ணைத் தரும் (1, 2, 3, 4 ... 30, 31)
mm என்பது மாதத்தின் எண்ணை இரு இலக்கங்களில் தரும் (01,02,03)
mmm என்பது மாதத்தினைச் சுருக்கித் தரும் (Jan, Feb,....)
mmmm என்பது மாதத்தினை அதன் முழு பெயரில் தரும் (January, February etc).
mmmmm என்பது மாதத்தின் முதல் எழுத்தினைத் தரும் (J, F, M, A,)







டிப்ஸ்... டிப்ஸ்...

* ஏதேனும் ஒரு பைல், போல்டர் என ஒன்றை செலக்ட் செய்து பின் Alt + Enter அழுத்தினால் அது குறித்த தகவல்கள் தரப்படும் Properties விண்டோ கிடைக்கும். அந்த பைல், போல்டர் அல்லது டிரைவ் குறித்து அனைத்து தகவல் களையும் தெரிந்து கொள்ளலாம்.

*  உங்கள் திரையில் பல விண்டோக்களைத் திறந்து வைத்து இயங்கிக் கொண்டிருக்கிறீர்களா? அனைத்தையும் மூடி திரையில் இருக்கும் ஒரு ஐகானைக் கிளிக் செய்திட விரும்புகிறீர்களா? விண்டோஸ் (Windows) கீயை (கண்ட்ரோல் மற்றும் ஆல்ட் கீகளுக்கு நடுவே விண்டோஸ் படத்துடன் உள்ள கீ) அழுத்திக் கொண்டு அதனுடன் ஈ கீயை அழுத்தவும். அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும். அய்யோ! மீண்டும் அவை வேண்டுமே என்று எண்ணுகிறீர்களா? மறுபடியும் அதே போல அந்த இரண்டு கீகளையும் அழுத்துங்கள். மீண்டும் அவை கிடைக்கும்.

* பைல்களை அழிக்கிறீர்கள். அவை எங்கே செல்கின்றன? ரீசைக்கிள் பின்னுக்குத்தான். இப்படியே அழித்துக் கொண்டு போகப் போக அவை அங்கு நிரம்பிக் கொண்டே இருக்கும். ஒரு நிலையில் என்ன பைல்களை எல்லாம் அழித்தோம் என்று தெரிய விரும்புகிறீர்களா? அல்லது நீக்கிய பைல்களை கம்ப்யூட்டரிலிருந்தே அழிக்க விரும்புகிறீர்களா? ரீசைக்கிள் பின் ஐகானில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Open என்பதனைக் கிளிக் செய்திடவும். இப்போது நீங்கள் அழித்த பைல்கள் தெரிய வரும். ஆனால் இவற்றை அங்கேயே கிளிக் செய்வதன் மூலம் படிக்க முடியாது. நீங்கள் மீண்டும் படிக்க விரும்பும் பைல்களை அந்த பைல் இருந்த டிரைவ் மற்றும் போல்டருக்குக் கொண்டு சென்ற பின்னரே படிக்க முடியும். இதற்கு மீண்டும் காண விரும்பும் பைலை செலக்ட் செய்து ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Restore என்ற பிரிவைக் கிளிக் செய்திட பைல் அதன் முந்தைய இடத்திற்குச் செல்லும். அங்கு சென்று அந்த பைலைத் திறந்து படித்துக் கொள்ளலாம்.

*  ஒரு பெரிய வேர்ட் பைலை எடிட் செய்கிறீர்கள். இன்னொரு அவசர காரியத்தை மேற்கொள்ள பைலையும் வேர்டையும் மூடிச் செல்கிறீர்கள். திரும்ப சில மணி கழித்து வந்து வேர்டையும் அந்த பைலையும் திறந்து எடிட் செய்திட உட்கார்ந்தால் கடைசியாக எங்கு எடிட் செய்தோம் என்று நினைவில்லை. கவலை வேண்டாம். ஷிப்ட் + எப் 5 (Shift + F5) அழுத்துங்கள். இறுதியாக நீங்கள் எடிட் செய்த இடத்திற்கு கர்சர் செல்லும். மறுபடியும் அழுத்தினால் அதற்கு முந்தைய எடிட் இடத்திற்குச் செல்லும். இப்படியே மூன்று இடத்திற்குச் செல்லும். அதன்பின் அழுத்தினால் என்ன ஆகும்? மீண்டும் விட்ட இடத்திற்கே வரும்.

*  கம்ப்யூட்டரில் ஒரு புரோகிராமை இயக்க முயற்சி செய்கிறீர்கள். அல்லது எதனை யேனும் அதில் தேட முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். அப்போது திடீரென அந்த புரோகிராம் எதுவும் செய்திடாமல் நின்று விடுகிறது. எந்த சலனமும் இல்லாமல் அப்படியே உள்ளது. என்ன செய்யலாம்? இதிலிருந்து எப்படி விடுபடுவது என்று பார்ப்போமா?

CTRL + ALT + DEL என்ற மூன்று பட்டன்களை ஒரு சேர அழுத்துங்கள். ஒரு கட்டம் எழுந்து வரும். அதில் உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம்களும் வரிசையாகக் காட்டப் பட்டிருக்கும். அந்த பட்டியலில் உங்களைத் திகைக்க வைத்த புரோகிராம் பெயரைத் தேடித் தேர்ந்தெடுங்கள். பின் End Task என்ற கட்டத்தில் கிளிக் செய்திடுங்கள். இனி உங்கள் கம்ப்யூட்டர் முடக்கம் நீங்கி மீண்டும் செயல்படத் தொடங்கும். இப்போது மீண்டும் நீங்கள் விரும்பிய அந்த புரோகிராமை இயக்கி செயல்படுங்கள்.

*  உங்களுடைய சி டிரைவில் என்ன என்ன உள்ளன என்று அறிய ஆவலா? விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று சி டிரைவ் மீது கிளிக் செய்து அறிவது ஒரு வழி. டாஸ் கமாண்ட் பிராம்ப்ட் வரவழைத்து அதில் C:\ என டைப் செய்து என்டர் அழுத்தி அறிவது ஒரு வழி. இன்னொரு வழியும் உள்ளது. எக்ஸ்பி தொகுப்பில் விண்டோஸ் கீ அல்லது ஸ்டார்ட் அழுத்தி அதில் வரும் மெனுவில் Run கிளிக் செய்து அதில் கிடைக்கும் விண்டோவில் C என மட்டும் டைப் செய்து என்டர் அழுத்துங்கள். உடனே விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்பட்டு C டிரைவில் உள்ள போல்டர்கள் மற்றும் பைல்கள் காட்டப்படும். அல்லது \ என்ற பேக்ஸ்லாஷ் அமைத்து என்டர் தட்ட சி டிரைவ் பைல்கள் கிடைக்கும்.


---------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?

 

No comments:

Post a Comment