இணைய இணைப்பில் இருக்கையில், நம் கம்ப்யூட்டருக்குள் அடுத்தவர்கள் ஊடுறுவி, பெர்சனல் தகவல்களைத் திருடுவது கம்ப்யூட்டர் உலகில், மிக சகஜமாகிப் போன ஒரு விஷயமாக மாறிவிட்டது. இதனைத் தடுக்கும் வகையில் செயல்படுவது நாம் இன்ஸ்டால் செய்திடும் பயர்வால் தொகுப்புதான். கட்டணம் செலுத்தி அமைத்திடும் பயர்வால் புரோகிராம்கள் பல இருக்கின்றன. ஆனால் பலரும் தொடர்ந்து பல காலமாகப் பயன்படுத்துவது இலவசமாக இணையத்தில் கிடைக்கும் ஸோன் அலார்ம் பயர்வால் (Zone Alarm Firewall) ஆகும். அண்மையில் இது பல புது வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை பயர்வால் எதனையும் பயன்படுத்தாதவர்களுக்கு ஒரு பயர்வால் நம் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் பாதுகாப்பு பணிகள் என்னவென்று பார்ப்போம்.
ஒரு பயர்வால், நம் கம்ப்யூட்டருக்குள் இணையத் தொடர்பின் வழியாக நுழைபவர்களைத்(Intruders) தடுக்கும். கம்ப்யூட்டர்களைக் கைப்பற்ற வருபவர்களுக்கு (Hackers) உங்களை மறைக்கும். நாம் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் மற்றும் விண்டோஸ் செக்யூரிட்டி எசன்சியல்ஸ் கட்டுப்படுத்த இயலாத வைரஸ் புரோகிராம்களைத் தடுக்கும். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் புதியதாக வரும் வைரஸ்புரோகிராம்களில் 3ல் ஒன்றைத் தப்பவிடுகின்றன என்பது அனைவரும் ஒத்துக் கொள்ளும் ஒரு முடிவாகும். எனவே தான் நமக்குக் கூடுதல் பாதுகாப்பு தேவையாய் உள்ளது. வஞ்சகமாக ஏமாற்றும் (Spoofers) புரோகிராம்களைத் தடுக்கும். நெட்வொர்க் வழியே சமர்த்தாய், நல்ல புரோகிராம் போல மாற்று தோற்றத்தில் வரும் புரோகிராம்களை நிறுத்தும். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுடன் இணைந்து செயல்படும். தானாகவே இயங்கிக் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கும் அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும். பெரிய அளவில் செட்டிங்ஸ் தேவையில்லை. நம் இணைய தேடலுக்கு பாதுகாப்பு அரணாக அமையும்.
ஸோன் அலார்ம் பயர்வால் தொகுப்பின் பதிப்பு 9.2 அண்மையில் வெளிவந்துள்ளது. பழைய பதிப்புகள் இயங்குகையில் அடிக்கடி நமக்கு எச்சரிக்கை தரும் பாப் அப் விண்டோக்கள் இதில் குறைக்கப்பட்டு, ஸோன் அலார்ம் அமைதியாக இயங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. கெடுதல் புரோகிராம் இயங்கும் தன்மையை அறியும் வகை மேம்படுத்தப்பட்டுள்ளது. தானாகவே வை–பி இணைப்புக்கான பாதுகாப்பு தரப்படுகிறது. பிஷ்ஷிங் புரோகிராம்களுக்கு எதிரான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஸோன் அலார்ம் டூல்பார் முற்றிலும் மாற்றப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் இது குறித்த தகவல்களை ஸ்டோர் செய்வதற்கு 2 ஜிபி இடம் தரப்படுகிறது.
இந்த புதிய பதிப்பினை ஐந்து நிமிடங்களில் இன்ஸ்டால் செய்துவிடலாம். இன்ஸ்டால் செய்தவுடன், இது செயல்படத் தொடங்க, கம்ப்யூட்டரை ரீபூட் செய்திட வேண்டும்.
இந்த புதிய பதிப்பில், கம்ப்யூட்டரிலிருந்து வெளிச் செல்வதனைத் தடுக்கும் வெளித்தடுப்பு (Outbound Firewall) பலமாக்கப்பட்டுள்ளது. உள்தடுப்பு சுவர் (Inbound Firewall) வெளியிலிருந்து வரும் வேண்டாத புரோகிராம்களைத் தடுக்கும். வெளித்தடுப்பு சுவர், கம்ப்யூட்டரிலிருந்து வெளியே நெட்வொர்க்கிற்குச் செல்லும் வேண்டாத புரோகிராம்களைத் தடுக்கும். இதன் மூலம் நம் கம்ப்யூட்டரிலிருந்து செல்லும் வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்கள் தடுக்கப்படுகின்றன. இதனால், நம் தடுப்பு சுவர் மற்றும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களையும் ஏமாற்றிவிட்டு வரும் பாட்நெட் போன்ற வைரஸ்கள் நம் கம்ப்யூட்டரிலிருந்து மற்றவற்றிற்குச் செல்வது தடுக்கப்படுகிறது.
புதிய பதிப்பில் DefenseNet என்ற பாதுகாப்பு கவசம் மேம்படுத்தப் பட்டுள்ளது. யாரிடமிருந்து வருகிறது என்பதனை மறைத்து, வழக்கத்திற்கு மாறாகச் செயல்படும் புரோகிராம்களின் தன்மையை இந்த பாதுகாப்பு டூல் அறிந்து தடுக்கிறது.
இந்த பதிப்பில் site check option என்ற ஒரு பட்டன் தரப்படுகிறது. இதன் மூலம் நாம் வழக்கமாகச் செல்லும் தளங்களைக் குறித்து வைத்து அவற்றை அனுமதிக்கலாம். ஓர் இணையதளம் பதிவான நாள், பழக்கப்படுத்தப்பட்ட நாள் இவற்றை எல்லாம் சோதனை செய்து, பின் அவற்றை நம் செட்டிங்ஸ் அடிப்படையில், சோதனை இன்றி, வழக்கமாக அனுமதிக்கிறது. இந்த டூல்பாரில் இணைந்து அமைக்கப்பட்டுள்ள இமெயில் செக்கர், ஹாட்மெயில், ஜிமெயில், யாஹூ மற்றும் பிற பி.ஓ.பி.3 மெயில் அக்கவுண்ட்களுடன் இணைந்து செயலாற்றுகிறது. ஆனால் ஐமேப் மெயில்களை சப்போர்ட் செய்திடவில்லை. இது ஏன் விலக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை.
ஐ ட்ரைவ் (IDrive) மூலம் இலவசமாக தகவல்களைப் பதிந்து வைக்க 2 ஜிபி இடம் ஆன்லைனில் தரப்படுவது இந்த பதிப்பு தரும் நல்ல அம்சமாகும்.
இதுவரை ஸோன் அலார்ம் பயர்வால் பயன்படுத்தா தவர்களும், பயன்படுத்தி வருபவர்களும், இந்த புதிய பதிப்பினை டவுண்லோட் செய்து பயன்படுத்தத் தொடங்கலாம். புதியவர்களுக்கு, முதலில் சற்று சிரமமாக இருக்கலாம். பின் போகப்போகச் சரியாகிவிடும். நமக்கு நம் பாதுகாப்புதானே முக்கியம்.
இந்த தளத்திற்கு செல்ல இங்கு கிளிக் செய்யவும்.
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
நான் புதியதாக தகவல் தொழில்நுட்ப்ப ( இங்கிலீஷ் ) வலைப்பூ தொடங்கி உள்ளேன்.இதற்கும் தாங்கள் தங்கள் ஆதரவை தந்து உதவுங்கள்.
என் ஆங்கில வலைப்பூ முகவரி : http://technologynewscorner.blogspot.com
நான் புதியதாக தகவல் தொழில்நுட்ப்ப ( இங்கிலீஷ் ) வலைப்பூ தொடங்கி உள்ளேன்.இதற்கும் தாங்கள் தங்கள் ஆதரவை தந்து உதவுங்கள்.
என் ஆங்கில வலைப்பூ முகவரி : http://technologynewscorner.blogspot.com
------------------- நன்றி -------------------
No comments:
Post a Comment