கம்ப்யூட்டர் இப்போது ஒரு குடும்பத்தில் ஆறு வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் சாதனமாக மாறிவிட்டது. இதில் பெரியவர்கள் பயன்படுத்துவதனைக் கூடக் கண்காணித்து, இப்படித்தான் நீங்கள் இதனைப் பயன்படுத்த வேண்டும் எனக் கூறலாம். ஆனால் குழந்தைகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கும்போதுதான், அவர்கள், அவற்றை மீறுவதற்கு ஆசைப்படுகிறார்கள். எதனையும் படித்துப் பயன்படுத்திப் பார்க்கும் ஆர்வம் இருப்பதால், எந்த தடையையும் அவர்கள் பொருட்படுத்துவதில்லை. ஆனால், அவர்களும் நாமும் எதிர்பாராமல், சில சிக்கல்கள் ஏற்படுகின்றன. கம்ப்யூட்டர்கள் இயக்கம் முடங்கிப் போகின்றது. இதனை ஓரளவிற்கு நாம் தடுக்கலாம். இது பற்றி ஆய்வு நடத்திய ஒரு நிறுவனம், குழந்தைகளுக்கான கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் இயக்கத்திற்குப் பதிலாக, லினக்ஸ் இயக்கம் இருந்தால், ஆபத்துக்களை ஓரளவிற்கு தடுக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளது. அதற்கான சில காரணங்களையும் கொடுத்துள்ளது. அவற்றை இங்கு காணலாம்.
1. வைரஸ் மற்றும் மால்வேர்: சிறுவர்கள் எப்போதும் தாங்கள் திறந்து பார்க்கக் கூடாத அல்லது இன்ஸ்டால் செய்து பார்க்கக்கூடாத தளங்களைத் திறந்து பார்ப்பது அவர்கள் வழக்கம். ஏனென்றால், அவர்கள் திறந்து பார்க்கும் வலைத் தளங்கள், கடிதங்கள் மற்றும் இணைப்பாக வரும் கோப்புகளை நாம் நூறு சதவிகிதம் கண்காணிக்க முடியாது. என்னதான் நாம் சிறந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு மற்றும் பயர்வால்களை நிறுவியிருந்தாலும், சில வேளைகளில் அவற்றையும் மீறி வைரஸ்களும் மால்வேர்களும் கம்ப்யூட்டருக்குள் நுழையலாம். இதனை அடிப்படையாகப் பார்க்கையில், லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பாதுகாப்பானதாக உள்ளது.
2. பாதுகாப்பு: உபுண்டு லினக்ஸ் போன்ற சிஸ்டங்களைப் பயன்படுத்த சிறுவர்களைப் பழக்குகையில் பாஸ்வேர்ட் போன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம். விண்டோஸ் இயக்கத்தில் பாஸ்வேர்ட் கொடுத்து, அவர்கள் அதன் மூலம் உள்ளே அமைப்பைக் கெடுக்கும் சூழ்நிலைகளை உருவாக்க வேண்டாமே.
3.செலவு: விண்டோஸ் இயக்கம் முறையாகப் பயன்படுத்தினால், அதற்கென விலை செலுத்தியே ஆக வேண்டும். இல்லை என்றால், என்றாவது ஒரு நாள், சிஸ்டம் பயன்படுத்துவதில் பிரச்னை எழும். முறையான சிஸ்டம் கூட, ஒரு நாளில் மாற்றப்பட வேண்டிய சூழ்நிலை எழலாம். அப்போது கூடுதலாக செலவு ஏற்படலாம். இதனைத் தவிர்க்கவும் லினக்ஸ் பயன்படுத்தலாம்.
4. வயதுக்குத் தகுந்த லினக்ஸ்: உங்களுக்குத் தெரியுமா? லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், சிறுவர்களின் வயதுக்கேற்ற வகையில் உள்ளது. சுகர் லேப்ஸ் (http://www.sugarlabs.org/) தரும் சுகர் (sugar), , மூன்று வயதிலிருந்து 18 வயது வரை உள்ளவர்கள் பயன்படுத்த edubuntu (http://www.edubuntu.org/), 2 வயதிலிருந்து 15 வயதுள்ளோர் பயன்படுத்த லினக்ஸ் கிட் எக்ஸ் (http://sourceforge.net/projects/linuxkidx/), மூன்று முதல் 12 வயதுள்ளோர் பயன்படுத்த போர் சைட் கிட்ஸ் (http://www.foresightlinux.org/foresightkids/), எனப் பல நிலைகளில் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கிடைக்கிறது. இந்த வயதினருக்கேற்ப, கிராபிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் மொழிகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் எல்லாம், சிறுவர்கள் பயன்படுத்துவதில் சில வரையறைகளையும் ஏற்படுத்தியுள்ளன.
5. நெட்புக்: தற்போது பயன்பாட்டில் பரவிவரும் நெட்புக் கம்ப்யூட்டர்கள் சிறுவர்கள் பயன்படுத்த மிகவும் சரியானவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சிறிய கீ போர்டு, சிறிய வடிவம் என சிறுவர்களுக்கேற்ற வகையில் இவை கிடைக்கின்றன. மேலும் இந்த நெட்புக் கம்ப்யூட்டர்களை இயக்க லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மிகவும் உகந்ததாக இருக்கிறது.
6. சுறுசுறுப்பான சிறுவர்கள்: சிறுவர்களை லினக்ஸ் சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தப் பழக்கிவிட்டால், எந்தவிதமான முணுமுணுப்பும் அவர்களிடமிருந்து வராது. மிக எளிதாக அதனை இயக்குவதைக் கற்றுக் கொள்வார்கள். சிறுவர்கள் தேடித் தேடிக் கற்றுக்கொள்ளும் குழப்பமற்ற இயக்கமாக லினக்ஸ் உள்ளது.
7. பரவி வரும் லினக்ஸ்: பன்னாட்டளவில் இன்று விண்டோஸ் இயக்கம் தான் பெரும்பாலான கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், லினக்ஸ் சிஸ்டம் பயன்பாடும், வேகமாகப் பரவி வருகிறது. சில நாடுகளில் முழுமையாக இது பயன்பாட்டில் உள்ளது. சிறுவர்களுக்கு இதனை அறிமுகப்படுத்துவதன் மூலம், எதிர்காலத்திற்கேற்ற பயனாளர்களாக நாம் இவர்களை உருவாக்கலாம். இதற்காக விண்டோஸ் இயக்கத்திலிருந்து இவர்களை ஒதுக்கி வைக்க வேண்டியதில்லை. பயனாளர்களுக்கு மிக அணுக்கமான முறையில் உருவாக்கப்பட்டுள்ள விண்டோஸ் இயக்கத்தினை, வளர்ந்து வரும் எந்த நிலையிலும் இந்த சிறுவர்கள் கற்றுக் கொள்ளலாம்.
8. கற்றுக் கொள்ள ஒரு தளம்: லினக்ஸ் ஓப்பன் சோர்ஸ் முறையில் உருவான ஆப்பரேட்டிங் சிஸ்டம். இதனால், சிறுவர்கள் வளரும்போது, இதனை உணர்ந்து, சிஸ்டம் இயங்கும் முறையையும் தாங்களாக கற்றுக் கொண்டு அதில் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சிப்பார்கள். இந்த வகையில் கற்றுக் கொள்வதற்கான அறிவினைத் தூண்டும் சிஸ்டமாக லினக்ஸ் உள்ளது. அதனை அறிமுகப்படுத்துவதன் மூலம், சிறுவர்களுக்கு நாம் கற்றுக் கொள்வதில் ஒரு நல்ல அடிப்படைத் தளத்தினைத் தருகிறோம்.
9. சமுதாய இணக்கம்: கற்றுக்கொள்வதில் ஏற்படும் ஆர்வத்தினால், லினக்ஸ் பயனாளர் குழுவினைச் சிறுவர்கள் அறிந்து கொள்வார்கள். உலகம் முழுவதும் உள்ள லினக்ஸ் குழுமங்கள் அவர்களுக்கு அறிமுகம் ஆகும். நாடு, மொழி, இனம் கடந்து அனைவரும் லினக்ஸ் சிஸ்டத்திற்கு மெருகூட்டலாம் என்ற கோட்பாட்டினை உணரும்போது, உலகளாவிய ஒரு சமுதாய இணக்கப் பண்பினை இந்த சிறுவர்கள் பின்னாளில் பெறுவார்கள்.
10. பொருள் வரையறை: சிறுவர்கள் லினக்ஸ் மூலம் எதனைப் பார்க்கலாம், எதனைப் பார்க்கக் கூடாது என வரையறை செய்வது, விண்டோஸ் இயக்கத்தில் மேற்கொள்வதைக் காட்டிலும் எளிது. http://dansguardian.org/ மற்றும் http://www.squidguard.org/ ஆகிய இரு தளங்களுக்குச் சென்றால், லினக்ஸ் தொகுப்பைப் பயன்படுத்தி, நாமாகச் சிறுவர்கள் பார்க்கக் கூடாத பைல்களைத் தடை செய்திடலாம் என்பதை அறியலாம். இதனால் பலவகைகளிலும் பாதுகாப்பான ஒரு கம்ப்யூட்டர் பயன்பாட்டுச் சூழ்நிலையை உங்களால் உங்கள் பிள்ளைகளுக்கு வழங்க முடியும்.
------------------- நன்றி -------------------
இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?
நன்றி.ஓட்டு போட்டாச்சு.
ReplyDelete