இன்றைய இணையதளங்களில், எந்த தளத்தில் என்ன மோசமான வைரஸ் அல்லது திருடும் நோக்கம் கொண்ட புரோகிராம் இருக்கும் என நம்மால் கண்டறிய முடியவில்லை. பிரபல நிறுவனங்களின் இணைய தள முகவரிகளில் சிறிய மாற்றங்கள் செய்தும், அந்நிறுவனங்களின் இணைய தளங்களைப் போலவே பக்கங்களை வடிவமைத்தும், பல திருடர்கள் தங்கள் திருடும் புரோகிராம்களை நம் கம்ப்யூட்டருக்குள் அனுப்பி விடுகின்றனர். இந்த சூழ்நிலையில், ஓர் இணைய தளம், இது போல தீங்கு எதுவும் இல்லாததுதானா என்று கண்டறிந்து கூறும் சேவையினை சைமாண்டெக் நிறுவனம் இலவசமாக நமக்குத் தருகிறது. இதற்கென http://safeweb.norton.com என்ற முகவரியில் தளம் ஒன்றை அமைத்துள்ளது.
இதனைப் பயன்படுத்துவது மிக எளிது. இந்த தளம் சென்று, நீங்கள் சோதனை செய்து பார்க்க விரும்பும் தள முகவரியினை அப்படியே காப்பி செய்து, அதற்கான இடத்தில் பேஸ்ட் செய்திடலாம்; அல்லது நாமாக டைப் செய்து அமைக்கலாம். சோதனை செய்து முடிவுகளைக் காட்ட, பாக்ஸ் அருகே உள்ள லென்ஸ் படத்தில் கிளிக் செய்தால் அல்லது என்டர் அழுத்தினால், சில நொடிகளில் சோதனை முடிந்து நமக்கு அந்த தளத்தின் பாதுகாப்பு தன்மை குறித்த தகவல்கள் தரப்படுகின்றன.
இந்த பாதுகாப்பு நிலை தகவல்கள் நான்கு வகைகளில் கிடைக்கின்றன.
1) மிக மோச எச்சரிக்கை - சிகப்பு வண்ண பட்டன்.
2) எச்சரிக்கை - சிகப்பு வண்ண ஆச்சரியக் குறி.
3) பாதுகாப்பானது - பச்சை நிற செக் குறியீடு.
4) சோதனையிடப்படவில்லை - சாம்பல் வண்ணத்தில் கேள்விக் குறி.
அறிக்கையில், மொத்த தளம் குறித்த பாதுகாப்பு தன்மை கூறப்படுகிறது. வர்த்தக ரீதியில் இல்லாத தளம் என்றால் பொதுவான பாதுகாப்பு நிலை தரப்படுகிறது. அடுத்ததாக, வர்த்தக தளம் எனில், அதனுடன் வர்த்தகம் மேற்கொள்கை யில் நமக்கான பாதுகாப்பு எப்படி என்று காட்டப்படுகிறது. அடுத்ததாக, பொதுவான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தகவல்கள் உள்ளன. இறுதியாக, என்ன என்ன பயமுறுத்தல் களை இந்த தளம் கொண்டுள்ளது என்று அதிலிருந்து அனுப்பப்படும் கெடுதல் விளைவிக்கும் வைரஸ் மற்றும் பிற புரோகிராம்கள் காட்டப்படுகின்றன.
வலது பக்கத்தில், நீங்கள் சோதனை செய்திடும் தளம் சமுதாய கண்ணோட்டத் தில் எப்படிப்பட்டது என்று காட்டப்பட்டு, அந்த தளம் குறித்த கருத்துக்களும் வைக்கப் படுகின்றன. இதற்கு முன்னதாக, இந்த தளத்தினை நமக்குக் காட்டும் பொதுவான குறியீடுகள் (tags) தரப்படுகின்றன.
இறுதியாகச் சொல்லப்பட்ட சமுதாயக் கண்ணோட்ட அறிக்கை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எடுத்துக்காட்டாக, யு-ட்யூப் தளம் குறித்து கேட்டபோது, மிக நல்ல தரம் கொண்டது எனக் காட்டப்பட்டது. சமுதாயக் கண்ணோட்ட அறிக்கையில், யு-ட்யூப் தளத்தில் காட்டப்படும் வீடியோ குறித்த தகவல்களில் உள்ள லிங்க்குகள் மோசமான தளத்திற்கு உங்களை எடுத்துச் செல்லலாம் என்ற எச்சரிக்கை தரப்படுகிறது.
இப்போதெல்லாம், நீளமான தள முகவரிகளைச் சுருக்கி நமக்குத் தருகின்றனர். இதில் எந்த தளம் மோசமானது என்று நாம் சிறிது கூட எண்ணிப் பார்க்க இயலாது. எனவே நார்டன் தரும் இந்த தளம் நமக்கு நல்ல பாதுகாப்பினை அளிக்கிறது. 30 விநாடிகளில் முழு பாதுகாப்பு குறித்தும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. எனவே அறியாத தளங்களுக்குச் செல்லும் முன், இந்த தளம் சென்று சோதனை செய்து கொள்வது நல்லதல்லவா! 30 விநாடிகள் செலவழித்தால், பின்னர் நாம் அறியாமல் மாட்டிக் கொண்டு துன்பப்பட வேண்டியதில்லையே.
------------------- நன்றி -------------------
இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா?
No comments:
Post a Comment