பெர்சனல் கம்ப்யூட்டர் இடத்தில் டேப்ளட் பி.சி. - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Wednesday, December 15, 2010

பெர்சனல் கம்ப்யூட்டர் இடத்தில் டேப்ளட் பி.சி.


இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாட்டில் வெகு வேகமாகப் பரவி வரும் ஒரு கம்ப்யூட்டர் சாதனம் டேப்ளட் பிசி. சர்வர், டெஸ்க்டாப், லேப்டாப், நோட்புக், நெட்புக் என்ற வரிசையில் தற்போது எளிமைக்கும், குறிப்பிட்ட பயன்பாட்டிற்குமான ஒரு கம்ப்யூட்டராக டேப்ளட் பிசி தற்போது இடம் பெற்று வருகிறது.

இது ஸ்டைலஸ் அல்லது டச் ஸ்கிரீன் கொண்ட ஒரு லேப்டாப் கம்ப்யூட்டர் எனச் சொல்லலாம். கைகளில் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தத் தக்க ஒரு கம்ப்யூட்டராக இது தற்போது இடம் பெற்று வருகிறது. மைக்ரோசாப்ட் இதனை 2001 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்திய போது, பேனா இணைந்த இயக்கத்துடன் கூடிய கம்ப்யூட்டர் என்று இதனை விவரித்தது. விண்டோஸ் எக்ஸ்பி டேப்ளட் பிசி எடிஷன் என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இதனை வெளியிட்டது. ஆனால் இதில் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையும் பதிந்து இயக்கும் உரிமை இதனைப் பயன்படுத்துபவருக்கு உண்டு.

கைகளில் எடுத்துச் செல்லும் வகையிலான கம்ப்யூட்டரை வாங்க வேண்டும் என எண்ணுபவர்களுக்கு, டேப்ளட் பிசி அல்லது லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்கலாமா என்ற மனப் போராட்டம் இருக்கும். இந்த இரண்டுமே, எங்கு சென்றாலும் எடுத்துச் செல்லும் வகையில் உள்ளன என்பது இவற்றிற்கிடையே நிலவும் ஒற்றுமை. ஆனால் அடுத்து இவை இரண்டும் பல வகைகளில் வேறுபடுகின்றன. இயங்கும் திறன், இயக்கப்படும் சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் ஆகியவற்றைப் பொறுத்தவரை இரண்டுமே ஒன்றுதான். ஆனால் சில வகைகளில் இவை வேறுபடுகின்றன.

டேப்ளட் பிசி பயன்படுத்துதலில் உள்ள சில கூடுதல் நன்மைகளை இங்கு பார்க்கலாம்.

1. பல லேப்டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், டேப்ளட் பிசிக்கள் எடை குறைந்தவை; அளவில் சிறியவை. இதனால் கைகளில் எளிதாக எடுத்துச் செல்லலாம். லேப் டாப் கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை, அவற்றை ஏதேனும் ஒரு பையில் வைத்தே எடுத்துச் செல்ல வேண்டும்.

2. டேப்ளட் பிசியை எந்த தரையிலும் படுக்கை வசமாக வைத்துப் பயன்படுத்தலாம்; லேப்டாப்பில், அதன் திரையை நெட்டுக்காக வைத்தே பயன்படுத்த வேண்டும். இதனால் முன்னால் இருப்பவரை இது மறைக்கும் வாய்ப்பு உண்டு.

3.டேப்ளட் பிசிக்களில் உள்ளீடு (Input) செய்திட, அதற்கென தரப்பட்டிருக்கும் சிறப்பு பேனாவினையே பயன்படுத்த வேண்டும். நம் கையெழுத்து தான் இதன் உள்ளீடு. எனவே நாம் இதனை எப்போதும் மேம்படுத்தலாம். வகைவகையாய் இதனைப் பயன்படுத்தலாம். ஆனால் மவுஸ் அல்லது டச்பேடில் அமைவதை நாம் மேம்படுத்த முடியாது.

4. டேப்ளட் பிசி என்பது தனிநபர் ஒருவரின் சொந்த பயன்படு பொருளாக இயங்குகிறது. இயக்குபவருக்கு அந்த டேப்ளட் பிசி சொந்த உரிமை கொண்டதாய் மாறுகிறது. ஏன், அந்த டேப்ளட் பிசிக்கும், அதன் உரிமையாளர் சொந்தமானவராய், புரிந்து கொள்ளப்பட்டவராய் மாறுகிறார். இது லேப்டாப்பில் அமைய வாய்ப்பில்லை. அது எப்போதும் எடுப்பார் கைப்பிள்ளைதான்.

டேப்ளட் பிசியில் சில குறைபாடுகளையும் சிலர் சுட்டிக் காட்டியுள்ளனர்.

1. லேப்டாப் கம்ப்யூட்டருடன் ஒப்பிடுகையில், டேப்ளட் பிசியின் திரை அகலம் வெகு குறைவு. இதன் அதிக பட்ச திரை அளவு 14.1 அங்குலம்.

2. இதில் உள்ளாக இணைந்ததாக, ஆப்டிகல் ட்ரைவ் இல்லை. வெளியாக நாம் இணைத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு சில பயனாளர்களுக்கு சிரமம் தருவதாகும்.

3.உங்களுடன் இருப்பவர்களும், உங்கள் டேப்ளட் பிசியைப் பங்கிட்டுக் கொள்ள விரும்பினால், அங்கு அதன் இயக்கத்தில் பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு. உங்களுடைய கை விரல் அசைவுகளுக்குப் பழக்கப்பட்ட டேப்ளட் பிசி, மற்றவர்களின் விரல் அசைவுகளைக் கணிக்க சில நாட்களாகலாம். எனவே தனி ஒரு நபர் பயன்பாட்டுக்கு டேப்ளட் பிசி சரியானது. வாழ்க்கை முழுவதும் ஒருவரே பயன்படுத்துவது நல்லது.

4. திரையில் சிறப்புப் பேனா கொண்டு எழுதுவதால், அதில் விரைவில் பிரச்னை எழ வாய்ப்புண்டு. எனவே சிறப்பான ஸ்கிரீன் கார்ட் எனப்படும் பாதுகாப்பு கவசம் தேவை.

5. தொழில் நுட்ப ரீதியில், டேப்ளட் பிசியில் மெதுவாகத் தான் உள்ளீடு செய்திட முடியும். லேப்டாப்பில் அதைக் காட்டிலும் வேகமாக உள்ளீடு செய்திட முடியும்.

6. இன்னொரு முக்கிய விஷயம் இதன் விலை. டேப்ளட் பிசிக்களின் விலை லேப்டாப்பின் விலையைக் காட்டிலும் அதிகம். விலை அடிப்படையில் டிஜிட்டல் சாதனங்களை வாங்கிப் பழகிய நமக்கு டேப்ளட் பிசிக்கள் சற்று எட்டாக் கனிகள் தான்.

மேலே தரப்பட்டுள்ள அம்சங்களை வைத்து ஒருவர், தான் எதனை வாங்க வேண்டும் என்பதனை முடிவு செய்திடலாம். இப்போது லேப்டாப் அம்சங்களுடன் கூடிய டேப்ளட் பிசிக்களும் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. அவற்றுடன் மவுஸ் மற்றும் கீ போர்டுகளை இணைத்துப் பயன்படுத்தலாம். லேப்டாப் போல நெட்டுக்காக வைத்தும் இயக்கலாம்.

வருங்காலத்தில் டேப்ளட் பிசியில் என்ன என்ன மாற்றங்கள் வரலாம்? முதலாவதாக இதன் ஸ்டோரேஜ் பிரச்னை தீர்ந்தது என்றே இப்போது கூறலாம். ஏனென்றால், இன்டர்நெட் இணைப்பு இருந்தால் போதும். நாம் நம் பைல்களை ஆன்லைனில் உள்ள சர்வர்களில் சேவ் செய்து வைக்கலாம். 3ஜி மற்றும் 4ஜி அலைவரிசை வர இருப்பதால், இனி எல்லாமே மொபைல் இன்டர்நெட் ஆக மாறும். எனவே டேப்ளட் பிசிக்கள், வேகமான இணைய இணைப்பினைக் கொண்டிருந்தால், அனைத்து பிரச்னைகளும் தீர்ந்தன என்றே கொள்ளலாம். டேப்ளட் பிசிக்களில் இனி புதிய இன்டர்பேஸ் கிடைக்கும். மவுஸினால் நாம் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் ஏற்படுத்தும் டபுள் கிளிக்கினை, டேப்ளட் பிசிக்களில் இருமுறை தொடர்ந்து தொடுவதன் மூலம் மேற்கொள்ளலாம். மொபைல் ஸ்மார்ட் போனை எடுத்துச் செல்வதைப் போல, இவற்றின் அளவு மற்றும் எடை குறைந்த டேப்ளட் பிசிக்கள் வரலாம். இந்த வகையில் பல டேப்ளட் பிசிக்கள் வரத் தொடங்கி விட்டன. நாம் தான் மாற வேண்டும். இணைய இணைப்பு மிக உறுதியானதாகவும், மலிவானதாகவும் கிடைத்தால், நிச்சயம் டேப்ளட் பிசிக்கள் தான் கம்ப்யூட்டர்கள் என்ற நிலை ஏற்படும்.

தற்போது மார்க்கட்டில் கிடைக்கும் சில டேப்ளட் பிசிக்களை இங்கு காணலாம்.

1.எக்ஸ்போ பிசி (Expo PC) : அண்மையில் நடந்த பொருட்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயங்கும் இதன் திரை 11.6 அங்குல குறுக்களவு கொண்டது. 1.5 வாட் ஸ்பீக்கர்கள், 1.3 மெகா வெப்கேமரா, இரண்டு யு.எஸ்.பி.போர்ட்கள், எச்.டி.எம்.ஐ. அவுட்புட் ஆகியன உள்ளன. இதில் 32ஜிபி மற்றும் 64 ஜிபி என இரு மாடல்கள் வர இருக்கின்றன.

2. எச்.பி.ஸ்லேட்(HP Slate) : சென்ற ஜனவரியில், லாஸ் வேகாஸ் கருத்தரங்கில் காட்டப்பட்டுப் பின் விற்பனைக்கு வந்தது. விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயங்குகிறது. திரை 8.9 அங்குல அகலம். இரண்டு வெப்கேமராக்கள் தரப்பட்டுள்ளன.

3. தோஷிபா லிபரெட்டோ டபிள்யூ 100 ( Toshiba Libretto W100): அண்மையில் அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகமானது. இதன் சிறப்பம்சம் இதில் இரண்டு திரைகள் இருப்பது. இரண்டிலும் விர்ச்சுவல் கீ போர்டு வைத்து டைப் செய்திடலாம். இது ஏறத்தாழ ஒரு மொபைல் கம்ப்யூட்டராகும்.

4. டெல் ஸ்ட்ரீக் (Dell Streak): இதனை ஸ்லேட் ஸ்மார்ட்போன் எனவும் அழைக்கின்றனர். ஜீன்ஸின் பாக்கெட்களில் வைத்து எடுத்துச் செல்லலாம். ஐந்து அங்குல மல்டி டச் ஸ்கிரீன் திரை தரப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்குகிறது. இரண்டு கேமராக்கள் உண்டு.

5. வி டேப் (We Tab ): தொடக்கத்தில் இது We Pad என அழைக்கப்பட்டது. எதற்காகப் பெயர் மாற்றம் செய்தனர் என்று தெரியவில்லை. லினக்ஸ் சிஸ்டத்தில் இயங்கும் டேப்ளட் பிசி. ஜெர்மனி நாட்டில் தயாரிக்கப்பட்டு பிற நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

6. நோஷன் இங்க் ஆடம் (Notion Ink Adam): இந்த பெயரில் இரண்டு மாடல்கள் வெளிவந்தன. இரண்டிலும் 10.1 டி.எப்.டி. திரைகள் உள்ளன. இரண்டு யு.எஸ்.பி. போர்ட், எச்.டி.எம்.ஐ. போர்ட், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மற்றும் சிம் கார்ட் ஸ்லாட்கள் தரப்பட்டுள்ளன. ட்ரேக் பேட் மற்றும் 3.2 மெகா பிக்ஸெல் வெப் கேமராக்கள் தரப்பட்டுள்ளன.

7. சாம்சங் காலக்ஸி டேப் (Samsung Ga laxy TAB): அண்மையில் பெர்லின் நகரில் நடந்த கருத்தரங்கத்தில் இது வெளியிடப்பட்டது. டேப்ளட் பிசிக்களில் SWYPE (விரல்களைத் தூக்காமல் டைப் செய்திட வழி தரும் தொழில் நுட்பம்) என்ற தொழில் நுட்பத்தினை அறிமுகப்படுத்திய முதல் டேப்ளட் பிசி இதுதான். இரண்டு வெப் கேமராக்கள் இணைக்கப்பட்டுள்ளன. அண்மையில் பிரபலமாகி வரும் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இது இயங்குகிறது.


------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?


No comments:

Post a Comment