பிரிண்டர்கள் இப்பொழுது ஓரளவு நியாயமான விலையில் கிடைப்பதால் எல்லோரும் அவற்றை வாங்கி விடுகிறார்கள். ஆனால் பிரிண்டரின் விலையை விட அதனுள் பொருத்த வேண்டிய இங்க் கார்ட்ரிட்ஜ் அல்லது டோனர் கார்ட்ரிட்ஜ் விலைதான் மயக்கத்தை உண்டாக்குவதாக பலர் எண்ணுகின்றனர். கார்ட்ரிட்ஜை சிக்கனமாகப் பயன்படுத்தினால், இந்த பயத்திலிருந்து நீங்கள் மீளலாம். அந்த வகையில் பிரிண்டர் தொடர்பான சில ஆலோசனைகள் கீழே தரப்பட்டுள்ளன.
எப்போதும் பிரிண்டருக்கான புதிய டிரைவரை நிறுவ வேண்டும். பிரிண்டரை வாங்கும்போது அதனுடன் தந்துள்ள டிரைவரை பின்பு மேம்படுத்தியிருப்பார்கள்; அந்த டிரைவரில் உள்ள பிழைகளை நீக்கியிருப்பார்கள்; புதிய வசதிகளை அதில் சேர்த்திருப்பார்கள். எனவே உங்களின் பிரிண்டரைத் தயாரித்த நிறுவனத்தின் வெப் தளத்தில் நுழைத்து, அதன் புதிய பதிப்பு டிரைவர் வெளியாகியிருந்தால் அதை டவுன்லோடு செய்து கம்ப்யூட்டரில் நிறுவுங்கள்.
பிரிண்டரை ஆப் செய்ய, பிரிண்டரில் உள்ள சுவிட்சையே பயன்படுத்துங்கள்; பவர் ப்ளக் அருகே உள்ள சுவிட்சை பயன்படுத்தாதீர்கள். பிரிண்டரில் உள்ள ஆஃப் சுவிட்சை அழுத்தினால், உடனே பிரிண்ட் ஹெட்டை சுத்தம் செய்து அதை சரியான இடத்தில் நிலை நிறுத்துகிற வேலையை பல இங்க்ஜெட் பிரிண்டர்கள் செய்கின்றன.
இப்போதைய பிரிண்டர்கள் எல்லாம் யுஎஸ்பி (USP) போர்ட்டுகளில் இணைக்கப்படும் விதத்திலேயே வெளியாகின்றன. நீங்கள் பயன்படுத்தும் பழைய பிரிண்டரை பேரலல் போர்ட்டில் இணைத்திருந்தால் அந்த பிரிண்டர் கேபிள் IEEE 1284 வரையறைக்கு ஏற்றதா என்பதைப் பாருங்கள். (பல மலிவான பிரிண்டர் கேபிள்கள் உள்ளன. அவை IEEE 1284 வரையறைக்கு ஏற்ப தயாரிக்கப்படடவை அல்ல). இந்த வரையறையிலான கேபிள்களால் அச்சின் வேகம் கூடும். Bidirection வசதி இந்த கேபிளில் உண்டு.
பிரிண்டரை பேரலல் போர்ட்டில் இணைத்திருந்தால் பயாஸின் (BIOS) செட்டப்பில் நுழைந்து ECP அல்லது EPP செட்டிங்கை கொண்டு வர வேண்டும்.Enthaneed Parallel Port (EPP) மற்றும் Enhanced Capabilities Port (ECP) ஆகியவை பயாஸ் செட்டப்பின் எந்த மெனுவின் கீழ் வருகிறது என்பதைப் பார்த்து அவற்றை Enabled என மாற்றுங்கள். பயாஸை பாதுகாத்து வெளியேறுங்கள். இவை எல்லாம் பழைய கம்ப்யூட்டரில், பழைய பிரிண்டரைப் பயன்படுத்துவோருக்கே. நீங்கள் புதியதாக அண்மைக் காலத்தில் இவற்றை வாங்கி இருந்தால், மேலே உள்ளதை ஒதுக்கிவிட்டுப் படியுங்கள்.
பயன்படுத்தாத போது பிரிண்டரை மூடி வையுங்கள். தூசிகள், அழுக்குகள், காகித பிசிறுகள் போன்றவற்றால் பிரிண்டர்கள் சரியாக இயங்காமல் போய் விடும். எனவே பிரிண்டரின் உள்ளே துடையுங்கள். சிறிய வாக்வம் கிளீனர் மூலம் பிரிண்டரின் உள்ளே உள்ள அழுக்குகளை உறிஞ்சி எடுங்கள். தூசிகள் வராத இடத்தில் பிரிண்டரை வைப்பது நல்லது.
பிரிண்டர்ஹெட்டை அவ்வப்போது துடைக்க வேண்டும். பிரிண்டருடன் வந்துள்ள சாப்ட்வேரில் பிரிண்டர்ஹெட்டைச் சுத்தப்படுத்தும் வசதி உள்ளதா எனப் பாருங்கள். இருந்தால் அந்த சாப்ட்வேரை இயக்கி பிரிண்டர்ஹெட்டை துடையுங்கள். சாப்ட்வேரில் அந்த வசதி இல்லாவிடில் பிரிண்டர் ஹெட்டை துடைக்கிற வழி பிரிண்டருக்கான புத்தகத்தில் தரப்பட்டுள்ளதா எனப்பாருங்கள். பிரிண்டர் ஹெட்டை மிதமான வெந்நீரில் நனைய வைத்த பிசிறற்ற துணியால் துடையுங்கள். Isopropxl Alcohol திரவத்தில் முக்கிய பஞ்சால் பிரிண்டர்ஹெட்டை துடைக்கவும் செய்யலாம்.
சரியான காகிதத்தையே பயன்படுத்துங்கள். பிரிண்டருக்கான தகவல் புத்தகத்தில் எப்படிப்பட்ட காகிதங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். மிக அதிக எடை கொண்ட காகிதங்களைப் பயன்படுத்தினால் அவை பிரிண்டரினுள் சிக்கி கொள்ளலாம். சில காகிதங்கள் இங்கை உறிஞ்சி பரப்பி விடுகின்றன. எனவே அச்சைப் பார்க்க/படிக்க எரிச்சலாக இருக்கும். தரமான காகிதங்களைப் பயன்படுத்துங்கள். மடங்கிய, கிழிந்த, வளைந்த காகிதங்களை அச்சடிக்கப் பயன்படுத்தாதீர்கள். இவை பிரிண்டரினுள் சிக்கி கொள்ளலாம்.
இங்க்ஜெட் பிரிண்டர்களைப் பயன்படுத்துகிறவர்கள் வாரம் ஒரு முறையாவது அச்சடிக்க வேண்டும். அந்த வாரம் அச்சடிக்க ஒன்றும் இல்லையே என்று சும்மா இருந்துவிட்டால் இங்க் உறைந்துபோய் விடும். பின்பு இங்க் கார்ட்ரிட்ஜையே தூக்கி எறிய வேண்டியதுதான். எனவே Test Print வசதியைப் பயன்படுத்தி கறுப்பிலும், வண்ணத்திலும் அச்சடியுங்கள். தேவைப்படுகிறதோ இல்லையோ வாரம் ஒரு முறை எதையாவது அச்சடிக்கிற பழக்கத்தை மேற்கொண்டால் பிரச்னைகள் எழாது.
ஓரிரு வாரங்கள் வெளியூர் செல்ல நேரிட்டால் கார்ட்ரிட்ஜை கழற்றி, காற்று புகாவண்ணம் நல்ல காகித உறையில் அதை வைத்து மூடுங்கள். கார்ட்ரிட்ஜை வாங்கும்போது அது இருந்த உறையை பத்திரப்படுத்தி வைத்திருந்தால், அந்த உறையை இப்பொழுது பயன்படுத்தலாம்.
அச்சடிப்பதற்கு முன்னர் பிரிண்ட் பிரிவியூவைப் பாருங்கள். பிரிவியூவில் நன்றாக இருந்தால் மட்டுமே அச்சடியுங்கள். இதனால் காகிதமும், இங்க்கும்/டோனரும் வீணாகாது. ஒரு காகிதத்திலேயே பல படங்களை அல்லது டாக்குமெண்டுகளை அச்சடிக்க முடிந்தாலும் நமக்கு பணம் லாபமே. Fine Print என்ற யுடிலிட்டியை www.download.com தளத்தில் இருந்து டவுன்லோடு செய்து பயன்படுத்துங்கள். ஒரு காகிதத்திலேயே பலவற்றை அச்சடிக்கும் ஆற்றல் இதற்க்குண்டு.
------------------- நன்றி -------------------
இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?
அருமையான விளக்கம் நன்றி..
ReplyDelete