தொழிற்படிப்பு முடித்தவர் வேலை பெற இவை தான் தேவை... - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Monday, July 5, 2010

தொழிற்படிப்பு முடித்தவர் வேலை பெற இவை தான் தேவை...


தற்போது தொழிற்நுட்பப் படிப்பு படித்து வரும் மாணவர்களில் பெரும்பாலானோர், பட்டப்படிப்பு முடித்தவுடன் தங்களுக்கு வேலை கிடைத்துவிடும் என்று கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். இவர்களுக்கு வேலை வாய்ப்பு சந்தையிலுள்ள பணி வாய்ப்பாளர்களின் எதிர்பார்ப்புகள் குறித்த ஆழமான அறிவு குறைவாக உள்ளது. இந்த எதிர்பார்ப்புகள் குறித்த தீவிரமான அலசல் இன்றி வேலையைத் தேடும் போது இவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும் அபாயமும் உள்ளது. ஒவ்வொரு பணி வாய்ப்பாளரும் பணிக்கு எடுக்கப்படும் நபரால் நிறுவனத்திற்கு எந்தவிதமான உபயோகம் இருக்கும் என்பதை அலசாமல் இருப்பதே இல்லை. எனவே புதிதாக வேலையைத் தேடும் இளைஞர்களுக்குத் தேவைப்படும் திறன் மற்றும் குணாதி சயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

1. அறிவுத்திறன் : இன்றைய கல்வி முறையிலுள்ள மிகப் பெரிய பலவீனம் என்னவென்றால் படிக்கும் படிப்பிற்கும், நிறுவனங்களின் தேவைகளுக்குமிடையே ஒரு மிகப்பெரிய இடைவெளி இருப்பது தான். மிக நல்ல மதிப்பெண்களைப் பெற்றுத் தேறிவரும் மாணவர்கள் கூட தங்கள் திறனை நிறுவனத்தின் தேவைக்கேற்றபடி மாற்றுவதில் சிரமப் படுகிறார்கள் என்பது அனுபவப்பூர்வமான உண்மையாகும்.

எனவே எந்த நிறுவனத்தில் நாம் இணைய விரும்புகிறோமோ, அந்தத் துறை சார்ந்த அறிவை படிக்கும் காலத்திலேயே வளர்த்துக் கொள்வது தற்போது இன்றியமையாததாக மாறி வருகிறது. நிறுவனங்களும் புதியவர்களைப் பணியில் சேர்க்கும் போது, பயிற்சிக்காக பணத்தை விரயம் செய்ய தற்போது விரும்புவதில்லை.

2. தகவல் பரிமாற்றத் திறன் - கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் :
நேர் காணலுக்கு வரும் ஒவ்வொருவரிடமும் பணி வாய்ப்பாளர்கள் சிறந்த தகவல் பரிமாற்றத் திறன் குறித்த தீவிர ஆராய்ச்சி செய்வதோடு, இதனை ஒரு முக்கியமான அம்சமாகவும் கருதுகின்றனர். குழுவாகப் பணியாற்ற இந்தத் திறன் மிக மிக அவசியம் என்பதால், பேசும் மற்றும் எழுதும் வகையிலான தகவல் பரிமாற்றத் திறன் முக்கிய தகுதியாக உள்ளது.

3. பிரச்னைகளைத் தீர்க்கும் திறன் : இன்றைய நவீன பணிச் சூழலில் பிரச்னைகளை குறைந்த காலத்தில் அடையாளம் காணுதல், பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வழி முறைகளை அறிதல், பிரச்னைகளை எளிமையான சிறு பகுதிகளாகப் பிரித்தல், இதனை நடைமுறைப் படுத்துதல் என்ற திறமைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

4. கற்கும் திறன் :
ஏற்கெனவே குறிப்பிட்டபடி, இன்றைய பணிச் சூழலில் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக, ஒரு சில துறைகள் வெகு வேகமாக காலாவதியாகிவிடுகின்றன. எனவே நிறுவனங்கள் வெற்றி பெற அவ்வப்போது கற்றல் (லேர்னிங்), கற்றதை ஒரு நிலையில் மறத்தல் (அன்லேர்னிங்), மறுபடியும் புதிதாகக் கற்றல் (ரீலேர்னிங்) என்பவை தாரக மந்திரங்களாக மாறி வருகின்றன.

5. நடத்தை : இந்தக் காரணியை நடத்தை, குணாதிசியம், மனநிலை என்று பலரும் பல்வேறு விதமாகக் குறிப்பிடு கிறார்கள். ஆனால் எதார்த்தத்தில் ஒரு வெற்றிகரமான பணியாளருக்கும், மற்றவர்களுக்குமிடையேயுள்ள முக்கிய வித்தியாசமே இதுதான். ஒரு தனி நபரைப் பயிற்சிகளின் மூலம் மட்டுமே இந்தக் காரணியில் உருவாக்கிவிட முடியாது என்பதால்,நிறுவனங்கள் இதில் குறைபாடு கொண்டவர்களைத் தேர்ந்தெடுக்கத் தயங்குகின்றன. இந்தக் காரணி மேலும் 6உட்பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.

அ. விசுவாசம் மற்றும் நம்பகத் தன்மை : கார்ப்பரேட் அளவிலும், குழுத் தலைவர் என்ற அளவிலும் நிறுவன விசுவாசம் கொண்டிருப்பதை நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. நம்பகத் தன்மை அற்றவர்களையும், நிறுவனத்தின் தேவைக்கேற்ப வேலை செய்யாதவர் களையும், விசுவாசமற்றவர்கள் என்று நிறுவனங்கள் நினைப்பதால் இத்தகையவர்களைப் பணியிலமர்த்த அவை தயங்குகின்றன.

ஆ. பழகும் தன்மை (இன்டர்பெர்சனல் ஸ்கில்ஸ் ) :
ஒவ்வொரு நாளும் உடன் பணி புரிபவர்களை உந்தும் விதத்தில் பணியாற்றுவது, பிரச்னைகள் வரும் போது அன்றைய தினத்திற்குள் அதனைச் சரி செய்வது, கடினமான சூழலில் உடன் பணியாற்றுபவர்களுடன் ஒத்துப் போவது போன்ற திறன்கள் இன்றைய நிறுவனங்களின் அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டது. இதன் மூலம் மட்டுமே குழுவாகப் பணியாற்றுவதில் சிரமமின்றிப் பணியாற்ற முடியும் என்பதால் இன்டர்பெர்சனல் ஸ்கில்ஸ் இன்று மந்திர வார்த்தையாக மாறியுள்ளது.

இ. பணிக் கலாச்சாரம் : குறிப்பிட்ட கால வரைக்குள் இலக்குகளை அடையும் விதத்தில் கடுமையாகப் பணியாற்றுபவர் களையே இன்றைய நிறுவனங்கள் விரும்புகின்றன. எனவே தேவை ஏற்படும் போது, வரையறுக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி நிறுவன இலக்கை அடையும் வெறி கொண்டு பணியாற்றும் கலாச்சாரம் கொண்டவர்களையே நிறுவனங்கள் விரும்புகின்றன.

ஈ. உந்து திறன் மற்றும் முன்னிலை வகித்தல் : உந்து திறன் எனப்படும் மோடிவேஷனுடன் பணியாற்றும் ஒருவர், நிறுவனத்தின் கடினமான சூழல்களிலும் வெற்றியை நோக்கியே பயணிக்கிறார் என்பதாலும், மாற்றத்திற்கான பணிகளில் இவர்களே முன்னிலை வகிக்கிறார்கள் என்பதாலும், இத்தகைய குணாதிசியம் பெற்றவர்களை நிறுவனங்கள் பணியிலமர்த்த பெரிதும் விரும்புகின்றன.

உ. இலகுத்தன்மை : மாற்றங்கள் நிறைந்த பணிச் சூழலில், அதற்கேற்ப மாறுவதும், நிறுவனத்தின் தேவையை மனதில் கொண்டு சுய விருப்புகளை விட்டு தேவைப்படும் வேகத்தில் பணியாற்றுபவர்களும் தற்போது அதிகம் தேவைப்படுகிறார்கள். ஒரே நேரத்தில் பல்வேறு பணிகளைச் சுமக்க வேண்டியிருக்கும் நிலையிலும், தேவைக்கேற்றபடி சில பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து இலக்குகளை அடைபவர்களையே இன்றைய நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கின்றன.

ஊ. உறுதி மற்றும் விடாமுயற்சி : பணியிலிருப்பவர்களுக்கு முதல் தோற்றத்தில் அடைய முடியாத இலக்குகள் போன்று தோன்றினாலும், கடின உழைப்பு, இலக்கை அடையும் உறுதியான முயற்சி, அடையும் வரை இடை விடாமல் முயற்சி செய்தல் போன்றவற்றால் வெற்றி நிச்சயமாகிறது. இதனால் தான் நிறுவனங்கள் இந்தக் குணத்தைப் பெற்றவர்களைப் பணியிலமர்த்துகின்றன. மேலே குறிப்பிடப்பட்ட திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் உங்கள் விருப்பத்திற்கேற்ற பணியிலமர்ந்து இலக்குகளை அடைவதோடு, உங்கள் வாழ்க்கையின் இலட்சியங்களையும் அடைய முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.


இந்த தகவல்களை உங்கள் நண்பர்கள் மற்றும் அனைவரிடமும் எடுத்து கூறுங்கள்.......


------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?

No comments:

Post a Comment