ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரும் அதை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவதில்லை என்கிறது ஓர் ஆய்வறிக்கை. மொபைல் பேட்டரித் திறன் மற்றும் செயல்திறன் இரண்டையும் கவனத்தில் கொள்ளாமல், தமக்கே தெரியாமல் ஆண்ட்ராய்டு பயனாளர்கள் பல்வேறு விஷயங்களில் அலட்சியமாக இருக்கிறார்கள். ஆண்ட்ராய்டு பயன்படுத்துபவர்கள் செய்யக்கூடாத 10 விஷயங்கள் இவைதான்.
எண்ணற்ற அப்ளிகேஷன்கள் :
மொபைலில் நிறைய அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்திருப்பவரா நீங்கள்? உங்கள் மொபைலில் நீங்கள் அடிக்கடிப் பயன்படுத்தும் அப்ளிகேஷன்களைக் கணக்கெடுங்கள். முடிவில், நீங்கள் அதிகம் பயன்படுத்தும் அப்ளிகேஷன்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இமேஜ் எடிட்டர் உள்ளிட்ட பல அப்ளிகேஷன்கள் வெகுநாள்களாகப் பயன்படுத்தாமல், மொபைல் மெமரியை வெறுமனே அடைத்துக்கொண்டிருக்கும். மேலும், பல அப்ளிகேஷன்கள் பின்புறத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும். இதனால் பேட்டரியும் கணிசமான அளவு காலியாகிக் கொண்டிருக்கும். எனவே, தொடர்ந்து பயன்படுத்தாத அப்ளிகேஷன்களை அவ்வப்போது அன்-இன்ஸ்டால் செய்து மொபைலின் பேட்டரி மற்றும் செயல்திறனை அதிகரியுங்கள்.
சார்ஜர் :
ஒவ்வொரு மொபைலும் வெவ்வேறு பேட்டரித் திறன் கொண்டவை. அதைப்போலவே, அவற்றிற்கான சார்ஜரும் வேறுபட்டவை. நாம் பயன்படுத்தும் மொபைல் சார்ஜரானது, மாறுதிசை மின்னழுத்தத்தை, நேரடி மின்சாரமாக மாற்றி மொபைல் பேட்டரியை சார்ஜ் செய்யும் கன்வெர்ட்டராக தான் செயல்படுகிறது. ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் யூ.எஸ்.பி டைப் சார்ஜர் கொண்டவைதான் என்றாலும், வேறு சார்ஜர்களைப் பயன்படுத்தும்போது மொபைல் விரைவில் சூடாகும். தவறான மற்றும் தரமில்லாத சார்ஜரைப் பயன்படுத்துவதே பல நேரங்களில் மொபைல் வெடிப்பதற்கான காரணமாக சொல்லப்படுகிறது. எனவே, உங்கள் மொபைலுக்கான ஒரிஜினல் சார்ஜரை மட்டுமே பயன்படுத்துங்கள்.
ஓய்வு தேவை :
சிலரின் மொபைல் அளவுக்கு மீறி எப்போதும் சூடாக இருக்கும். மேலும், அப்ளிகேஷனைத் திறக்கவும் அதிக நேரம் எடுக்கும். இந்தப் பிரச்னைகளுக்கு மொபைலை அவ்வப்போது ரீ-ஸ்டார்ட் செய்வதும் பல்வேறு தீர்வுகளில் ஒன்று. மனிதனுக்கு எப்படி ஆறு மணிநேரத் தூக்கம் அவசியமோ, அதேபோல மொபைலுக்கும் ஓய்வு தேவை. சில மணி நேரமாவது மொபைலுக்கு ஓய்வளிப்பதோடு, அவ்வப்போது மொபைலை ரீ-ஸ்டார்ட் செய்ய வேண்டும். மொபைலில் இயங்கிக்கொண்டிருக்கும் அப்ளிகேஷன்கள் மூடப்பட்டு RAM க்ளீன் ஆவதால், மொபைலின் செயல்திறனும் அதிகமாகும்.
ஆன்ட்டி-வைரஸ் ஒன்று போதும் :
மொபைல் பாதுகாப்புக்காக ஆன்ட்டி-வைரஸ் அப்ளிகேஷன் பயன்படுத்துவது அவசியம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், ஆன்ட்டி-வைரஸ் அப்ளிகேஷன் பொதுவாக மொபைலின் பின்புறம் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட ஆன்ட்டி-வைரஸ் பயன்படுத்தும்போது, அவை மொபைலின் வேகத்தைக் குறைப்பதோடு, பேட்டரியையும் அதிகம் பயன்படுத்தும். பெரும்பாலான ஆன்ட்டி-வைரஸ் அப்ளிகேஷன்கள் கிட்டத்தட்ட ஒரே அளவிலான வேலையைத்தான் செய்யக்கூடியவை. மொபைலின் சார்ஜ் விரைவில் தீர்ந்து போகவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, ஒரேயொரு பாதுகாப்பான ஆன்ட்டி-வைரஸ் பயன்படுத்தினால் போதுமானது.
நெட்வொர்க்கை கவனியுங்கள் :
4G நெட்வொர்க் இந்தியாவில் மிக வேகமாகப் பிரபலமடைந்து வருகிறது. இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேசன் (International Data Corporation) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் 2017 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், 94.5 சதவிகித அளவுக்கு 4G ஸ்மார்ட்போன்கள் தான் விற்பனையாகியுள்ளன. பொதுவாக 4G நெட்வொர்க்கைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, மொபைலின் சார்ஜ் விரைவில் காலியாகும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தேவையில்லாத நேரத்தில் டேட்டாவை ஆஃப் செய்வதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இதே போல வைஃபை, ப்ளூடூத் ஆகியவற்றைப் பயன்படுத்தியவுடன், அவற்றை ஆஃப் செய்யவும் மறந்துவிடாதீர்கள்.
அப்ளிகேஷன்களுக்கு ப்ளே ஸ்டோர் போதும் :
கறுப்புச் சந்தையில் பெய்டு அப்ளிகேஷன்கள் பலவும் இலவசமாகக் கிடைக்கின்றன. பணத்தை சிக்கனப்படுத்த நினைத்து, 'Unknown Sources' அப்ளிகேஷன்களை மொபைலில் நேரடியாக இன்ஸ்டால் செய்வது மிகவும் ரிஸ்க்கான விஷயம். கறுப்புச் சந்தையில் மால்வேர் எனப்படும் தீங்கு ஏற்படுத்தும் அப்ளிகேஷன்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றன. அந்தரங்கத் தகவல்களை நமக்கே தெரியாமல் அபகரிப்பதோடு, மொபைலையும் பாதிக்கக்கூடியவை இவை. எனவே, மொபைலில் இன்ஸ்டால் செய்யும் எந்தவொரு அப்ளிகேஷனையும், கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தே டவுன்லோடு செய்யுங்கள்.
மெமரி கார்டு :
ஒரே அளவிலான நினைவுத்திறன் கொண்ட மெமரி கார்டுகளின் விலையில் கூட, பெரிய வித்தியாசம் இருப்பதைக் கவனித்திருக்கலாம். அவற்றின் தரத்திலும் வித்தியாசம் இருப்பதே இந்த விலை வேறுபாட்டுக்கான காரணம். ஒவ்வொரு மெமரி கார்டும் குறிப்பிட்ட ரைட்டிங் ஸ்பீடு கொண்டவை. இவற்றை க்ளாஸ் எனப் பிரிப்பார்கள். க்ளாஸ் எண் அதிகமானால் அவற்றின் ரைட்டிங் ஸ்பீட் மற்றும் தரமும் அதிகமாக இருக்கும். எனவே, அதிக நினைவுத்திறனை விட, ரைட்டிங் ஸ்பீடு அதிகமான மெமரி கார்டையே தேர்ந்தெடுங்கள். இதனால் ஃபைல்களை விரைவில் சேமிப்பதோடு, அவற்றை எளிதாக அக்சஸ் செய்யமுடியும்.
பாஸ்வேர்டு பாதுகாப்பு :
'மொபைலை நான் தான் அதிகநேரம் கையில் வைத்திருப்பேன். எதற்காக அதை வீணாக லாக் செய்ய வேண்டும்?' எனப் பலரும் நினைப்பார்கள். ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவரும் கண்டிப்பாக பாஸ்வேர்டு அல்லது லாக் ஸ்க்ரீன் பயன்படுத்த வேண்டும். மொபைல் தொலைந்துபோனாலோ அல்லது திருடப்பட்டாலோ, மொபைலை லாக் செய்யாமல் இருந்தால் உங்கள் தகவல்களை யார் வேண்டுமானாலும் எளிதில் அக்சஸ் செய்ய முடியும். கால் ரெக்கார்ட், புகைப்படங்கள் மற்றும் வங்கிக்கணக்கு விபரங்கள் வரை அத்தனைத் தகவல்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என நினைப்பவர்கள் உடனடியாக மொபைலை லாக் செய்யப் பழகுங்கள்.
டாஸ்க் மேனேஜர் :
ஆண்ட்ராய்டு மொபைலில் இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன்களை டாஸ்க் மேனேஜர் மூலமாக அவ்வப்போது க்ளியர் செய்வது பலரின் வழக்கம். RAM க்ளீன் ஆவதோடு மொபைலின் செயல்திறன் இதனால் அதிகரிக்கும் என்பது உண்மை தான். ஆனால், அடிக்கடிப் பயன்படுத்தக்கூடிய அப்ளிகேஷன்களை மட்டுமாவது டாஸ்க் மேனேஜர் மூலமாக க்ளோஸ் செய்ய வேண்டாம். ஏனென்றால் அப்ளிகேஷன் ஒவ்வொரு முறை திறக்கும்போது குறிப்பிட்ட அளவு பேட்டரியை அதிகமாகப் பயன்படுத்தும். இதனால் மொபைலின் பேட்டரி சார்ஜ் விரைவில் குறைய வாய்ப்பிருக்கிறது. எனவே, டாஸ்க் மேனேஜர் மூலமாக அத்தனை அப்ளிகேஷன்களையும் க்ளோஸ் செய்வதைத் தவிர்க்கவும்.
மெமரி க்ளீனர் ஆப்ஸ் :
புதிதாக மொபைல் வாங்கிய பலரும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் இரண்டையும் இன்ஸ்டால் செய்த கையோடு, க்ளீனிங் ஆப்ஸ்களைத் தான் இன்ஸ்டால் செய்வார்கள். ஆனால், க்ளீனிங் ஆப்ஸ் பெரும்பாலும் பேட்டரியை அதிகமாக சாப்பிடுவதோடு, தேவையற்ற விளம்பரங்களையும் லோட் செய்யும். தற்போது விற்பனையாகும் பெரும்பாலான பிராண்டு மொபைல்களிலும் மெமரி க்ளீனிங் ஆப்ஷன்கள் டீஃபால்ட்டாகவே வந்துவிட்டன. அவற்றைப் பயன்படுத்தினால் போதுமானது. அதையும் மீறி க்ளீனிங் ஆப்ஸ் இன்ஸ்டால் செய்வதால், மொபைலின் ஸ்டோரேஜை ஆக்கிரமிப்பதோடு, செயல்திறனையும் குறைக்கும்.
--------------------------------------நன்றி----------------------------------------
No comments:
Post a Comment