இன்டெல் நிறுவனம் தன் புதிய திட்டத்தில், புதிய கட்டமைப்பில் உருவான ஐவி பிரிட்ஜ் ப்ராசசரை வெளியிட்டுள்ளது. தன்னுடைய பென்டியம் 4 ப்ராசசர்களை விட்டு வெளியே வந்ததிலிருந்து, இன்டெல் நிறுவனம் ஒருவகையான டிக்-டாக் (“ticktock”) விளையாட்டை தன் ப்ராசசர்களில் காட்டி வருகிறது. இதில் டிக் (“tick”) என்பது ப்ராசசர் வடிவமைப்பில் சுருங்கும் தன்மையைக் குறிக்கிறது. டாக் என்பது ஒரு புதிய மைக்ரோ ப்ராசசரின் கட்டமைப்பினைக் குறிக்கிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் இன்டெல் நிறுவனத்திடமிருந்து, புதிய கட்டமைப்பில் ப்ராசசர்களை எதிர்பார்க்கலாம்.
சென்ற ஆண்டில், இன்டெல் நிறுவனம் Sandybridge என அழைக்கப்பட்ட புதிய மைக்ரோ கட்டமைப்பினை அறிமுகப் படுத்தியது. இதில் கோர் (Core ix) வரிசை ப்ராசசர்கள் வெளியாகின. இதே அமைப்பில், இப்போது புதிய கட்டமைப்பு பதிப்பாக ஐவி பிரிட்ஜ் (Ivy Bridge) ப்ராசசரை வெளியிட்டுள்ளது. மிகக் குறைந்த மின் சக்தியைப் பயன்படுத்தி, அதிக கம்ப்யூட்டிங் திறனை இது அளிக்கும். இந்த சிப் 22nm நானோ மீட்டர் தயாரிப்பு ப்ராசசரை அடிப்படையாகக் கொண்டது. (நானோ மீட்டர் - ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரில் நூறு கோடியில் ஒரு பங்கு ஆகும்.) இது முந்தைய சாண்டி பிரிட்ஜ் 32nm வடிவமைப்பினைக் காட்டிலும் தடிமன் குறைவாக இருக்கும். 22nm எவ்வளவு சிறியது என்பதனைக் குறிக்க இன்டெல் ஓர் எடுத்துக்காட்டினைத் தந்துள்ளது. 0.05 அங்குல விட்டம் உடைய ஒரு குண்டூசியின் தலையில், 10 கோடி எண்ணிக்கையில், 22 நானோ மீட்டர் ட்ரான்சிஸ்டர்களை வைக்கலாம். மனித தலை முடி அளவிலான அகலத்தில் 4 ஆயிரம் ட்ரான்சிஸ்டர்களை அமைக்கலாம்.
இன்டெல் நிறுவனத்தினை அமைத்தவர்களில் ஒருவரான கார்டன் மூர் இது குறித்து கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும், சிப் ஒன்றில் வைக்கப்படும் ட்ரான்சிஸ்டர்களின் எண்ணிக்கை இரு மடங்காகும். ஆனால் அதற்கான செலவோ குறைவாகவே இருக்கும் என்றார். இந்த கருத்தை மூர் விதி என்று கூறுகின்றனர். இந்த விதியைப் பின்பற்றி வரும் இன்றைய விஞ்ஞானிகள், ட்ரான்சிஸ்டர்களின் அளவைத் தொடர்ந்து சுருக்கி வருகின்றனர். அதனால் தான் ஒரு ப்ராசசரில் நூறு கோடிக்கு மேல் ட்ரான்சிஸ்டர்களை வைக்க முடிகிறது. (வரும் 2013ல், 14 நானோ மீட்டர் ட்ரான்சிஸ்டர்களையும், 2015 ஆம் ஆண்டில் 10 நானோ மீட்டர் ட்ரான்சிஸ்டர்களையும் வடிவமைக்க இன்டெல் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது) தற்போது வெளிவந்துள்ள ப்ராசசரில் உள்ள ட்ரான்சிஸ்டர்களில், மின் சக்தி திறன் கசிவது தடுக்கப்படுகிறது. ஒரு விநாடியில், பத்தாயிரம் கோடி முறை, இந்த ட்ரான்சிஸ்டர்களை ஆன்/ஆப் செய்திடலாம். இதுவரை மேற்கொண்ட செயல்திறனை மேற்கொள்ள, குறைவான மின் சக்தியே தேவைப்படுகிறது. மேலும் இந்த தொழில் நுட்பத்தினால், சிப் தயாரிக்கும் செலவு 2% முதல் 3% வரை குறைகிறது.
ஐவி பிரிட்ஜ் ப்ராசசர் சிலிகானில், யு.எஸ்.பி.3 தொழில் நுட்பம் பதிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இத்தகைய வசதியை இன்டெல் தருகிறது. இதனால் யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் அனைவருக்கும் கிடைக்கும். அதுவே பன்னா டெங்கும் தரப்படுத்தப்படும். எனவே 2012 ஆம் ஆண்டில், யு.எஸ்.பி. 3 வகை தொழில் நுட்பத்தை ஏற்று செயல்படக் கூடிய, 40 கோடி சாதனங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ப்ராசசரின் சிறப்பம்சம் இதன் கிராபிக்ஸ் மற்றும் மல்ட்டி மீடியா திறன் ஆகும். Intel HD 3000 கிராபிக்ஸ் இதில் பயன்படுத்தப்படுகிறது. இது சாண்டி பிரிட்ஜ் ப்ராசசரில் இருந்ததைக் காட்டிலும் இரு மடங்கு திறன் அதிகம் கொண்டதாகவும், அனைத்திலும் மேம்படுத்தப் பட்டதாகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் செயல்திறனைப் பெருக்க, இன்டெல் நிறுவனத்தின் 3டி ட்ரைகேட் ட்ரான்சிஸ்டர் தொழில் நுட்பம் பயன் படுத்தப்பட்டுள்ளது. தட்டையான பழைய வகை ட்ரான்சிஸ்டர்களுக்குப் பதிலாக, மூன்று பரிமாண ட்ரான்சிஸ்டர்கள் இந்த தொழில் நுட்பத்தில் பயன்படுத்தப்படுகிறது. சாண்டி பிரிட்ஜ் ப்ராசசர்களைக் காட்டிலும் 20% கூடுதல் செயல் திறன் கொண்டதாக இது இருக்கும்.
இந்த வெளியீட்டுடன், இன்டெல், Core i5 ப்ராசசரின் 13 quadcore வகையையும், ஐவி பிரிட்ஜ் கட்டமைப்பினை அடிப்படையாகக் கொண்ட ஐ7 (i7) ப்ராசசரையும் இன்டெல் தந்துள்ளது. இது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களை இயக்குவதனை இலக்காகக் கொண்டது. அல்ட்ரா நோட்புக் கம்ப்யூட்டர்களுக்கான ப்ராசசர்கள் வகை இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. தற்போது 14 வகையான ஐவி பிரிட்ஜ் ப்ராசசர்கள் பெர்சனல் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றன. தொடக்கத்தில் Core i3 சிப் வெளியிடப்பட மாட்டாது. Core i5 ப்ராசசர் ஐந்து வகைகளில் வெளியாகின்றன. Core i7 ப்ராசசர் ஏழு வகைகளில் கிடைக்கும். விலை குறைவான Core i3 சிப் பின்னர் வெளியிடப்படும்.
ஐவி பிரிட்ஜ் ப்ராசசர்களுடன் லேப் டாப் கம்ப்யூட்டர்கள் விரைவில் விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
------------------- நன்றி -------------------
இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !
No comments:
Post a Comment