WiFi வலைப்பின்னல் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Saturday, September 15, 2012

WiFi வலைப்பின்னல்




வயர்லெஸ் இன்டர்நெட் நெட்வொர்க் என அழைக்கப்படும் வை-பி இன்டர்நெட் இணைப்பு நமக்கு, ஓரிடத்தில் அமர்ந்து மட்டுமே இன்டர்நெட் இயக்கும் சிக்கலைத் தவிர்க்கிறது. ஜாலியாக, வீட்டில் அல்லது அலுவலகத்தில் எந்த இடத்திலும் அமர்ந்து இன்டர்நெட்டில் உலா வர உதவுகிறது. கேபிளை இணைக்காமல், எளிதாக இன்டர்நெட் உலகைக் காண, அனுபவிக்க முடிகிறது.

இருப்பினும், இதிலும் பல தொல்லைகளை நாம் சந்திக்கிறோம். இன்டர்நெட் இணைப்பைத் தரும் ரேடியோ அலைகளுக்குப் பல தடைகள் உருவாகின்றன. சிக்னல் வட்டம் சுருங்குதல், ஹார்ட்வேர் பிரச்னைகள், நமக்கு இணைப்பு சேவையினைத் தரும் நிறுவனம் தரும் பிரச்னைகள் எனப் பலவகைகளில் வை-பி இணைப்பிற்கு தடைகள் கிடைக்கின்றன. இவை கூடுமானவரை ஏற்படாமல் இருக்க சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.

1. லேப்டாப்பில் உள்ள வை-பி பட்டன்:

காபிஷாப், வீடு அல்லது அலுவலகத்தில் வை-பி இணைப்பு பெறுவதில் பிரச்னை உள்ளதா? முதலில் உங்கள் கம்ப்யூட்டரில் பிரச்னை உள்ளதா எனப் பார்க்கவும். உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரில் வை-பி பட்டன் அல்லது ஸ்விட்ச் உள்ளதா எனவும் அது எந்த நிலையில் உள்ளது எனவும் கண்டறியவும். இதனை நீங்கள் அறியாமலேயே அழுத்தி அதன் இயக்கத்தை நிறுத்தியிருப்பீர்கள். எனவே அதனை மீண்டும் அழுத்தி இயக்கவும்.


2. கம்ப்யூட்டர் மற்றும் ரௌட்டர் ரீ பூட்:

வை-பி பட்டனை அழுத்திய பின்னரும், இன்டர்நெட் இணைப்பு கிடைக்கவில்லை எனில், உங்கள் கம்ப்யூட்டர் அல்லது இன்டர்நெட் இணைப்பு கிடைக்கப் பயன்படுத்தும் சாதனத்தையும், ரௌட்டரையும் ரீ பூட் செய்திடவும். இதனால், இந்த சாதனங்களின் ஹார்ட்வேர் பாகங்கள் ஏதேனும் பிரச்னை தருவதாக இருந்தால் அல்லது சாப்ட்வேர் குறையுடன் இயக்கப்பட்டிருந்தால், அவை சரி செய்யப்படும். அப்படியும் கிடைக்கவில்லை எனில், ரௌட்டரை இணைக்கும் கேபிள்களை 5 முதல் 10 விநாடிகள் கழற்றி வைத்துவிட்டு, பின்னர் இணைக்கவும். இதனை “power cycling” வழி என்பார்கள். மின் சக்தி மற்றும் இணைப்பு அகற்றப்பட்டு, மீண்டும் தரப்படுகையில், இவை சரியாக இயங்கத் தொடங்கும்.


3.ரௌட்டரில் வை-பி சேனல் மாற்றம்:

பெரும்பாலான வை-பி ரௌட்டர்கள் மற்றும் சாதனங்கள் குறிப்பிட்ட கிகாஹெர்ட்ஸ் ரேடியோ அலைவரிசையினையே பயன்படுத்துகின்றன. இவற்றில் பல சேனல்கள் இருந்தாலும், அவை அனைத்தும் ஒரே நேரத்தில் பயன்படுத்தப்படுவதில்லை. ரௌட்டர்களையும் இணைப்பினையும் வழங்கிய இன்டர்நெட் சேவை நிறுவனங்கள் ஒரே ஒரு சேனலை மட்டும் பயன்படுத்தும் வகையில் செட் செய்து நமக்குத் தந்திருக்கும். இதனால், நாம் இயக்கும் இடத்தில் இயங்கும் பிற ரௌட்டர்களால், நம் இணைப்பிற்குத் தொல்லை ஏற்படலாம். பொதுவாக, இத்தகைய பிரச்னை ஷாப்பிங் சென்டர்கள், அலுவலகங்கள் இயங்கும் பல மாடி கட்டடங்களில் ஏற்படலாம். பேபி மானிட்டர்கள், கார்ட்லெஸ் போன்கள் பயன்படுத்தும் ரேடியோ அலைவரிசையினாலும் இந்த பிரச்னை ஏற்படலாம். மைக்ரோ வேவ் அடுப்பினாலும் இந்த பிரச்னை ஏற்படலாம்.

இதனைக் கண்டறிய உங்கள் கம்ப்யூட்டரில், அதன் அருகே இயங்கும் வயர்லெஸ் நெட்வொர்க் இணைப்புகளின் பட்டியலைக் காணவும். இந்தப் பட்டியல் உங்களின் இணைப்பிற்கு இடையூறு வழங்கும் நெட்வொர்க் இணைப்பினைக் காட்டிக் கொடுக்கும்.

இதனைத் தெரிந்து கொண்ட பின்னர், உங்கள் வை-பி சேனல் மற்றும் ரௌட்டரை மாற்றி அமைக்கவும். இதற்கு In SSI Der போன்ற புரோகிராம்கள் உதவலாம். இலவசமாக இதனைத் தரவிறக்கம் செய்திட http://www.pcworld.com/downloads/file/fid,80971order,4/description.html என்ற இணைய முகவரிக்குச் செல்லவும். இதே வகையில் செயல்படும் Vistumbler, Meraki Wifi Stumbler, Wifi Analyzer போன்ற புரோகிராம்களும் உங்களுக்கு உதவலாம்.


4. ரௌட்டரின் இடத்தை மாற்றவும்:

இன்டர்நெட் இணைப்பு ஒரு குறிப்பிட்ட இடத்தில் லேப்டாப் கம்ப்யூட்டர் அல்லது வேறு சாதனத்தை வைத்து இயக்குகையில் மட்டுமே ஏற்படுகிறது என அறிய வந்தால், அந்த இடம் ரௌட்டரின் திறனைத் தாண்டிய இடமாக இருக்கலாம். அந்த சூழ்நிலையில், நீங்கள் இயக்கும் இடத்தை, ரௌட்டருக்கு நெருக்கமாக மாற்றவும்; அல்லது ரௌட்டரின் இடத்தை, நீங்கள் இயங்கும் வீடு அல்லது அலுவலகத்தின் மையப் பகுதிக்கு மாற்றவும்.


5. தொடக்க நிலைக்கு ரௌட்டரைக் கொண்டு செல்க:

மேலே சொல்லப்பட்ட எதற்கும் உங்கள் வை-பி இணைப்பு சரியாகவில்லை எனில், ரௌட்டரை அதன் பேக்டரி செட்டிங்ஸ் என்று சொல்லப்படுகிற தொடக்க நிலைக்கு மாற்றவும். இதற்கு ரௌட்டர் சாதனத்தில் ரீசெட் பட்டன் ஒன்று தரப்பட்டிருக்கும். அதனை ஒரு சிறிய பென்சில் அல்லது பேப்பர் கிளிப் கொண்டு ஒரே ஒரு முறை அழுத்தவும். இவ்வாறு ரீசெட் செய்வதற்கு முன்னர், உங்கள் வை-பி இணைப்பின் பல்வேறு செட்டிங்ஸ் அமைப்பினைக் குறித்து வைத்துக் கொள்ளவும். ரீசெட் செய்தவுடன் மீண்டும் செட் செய்திட இவை உதவும்.


6. ட்ரைவர் அல்லது சாப்ட்வேர் ரீ இன்ஸ்டால்:

மேலே தரப்பட்டுள்ள அனைத்து வழிகளும் பயனளிக்காமல், ஒரே ஒரு கம்ப்யூட்டரில் மட்டுமே பிரச்னை தொடர்கிறது எனில், அந்தக் கம்ப்யூட்டரில் பதியப்பட்டிருக்கும் ரௌட்டருக்கான ட்ரைவர் அல்லது சாப்ட்வேர் தொகுப்பில் பிரச்னை இருக்கலாம். இவற்றை ரீ இன்ஸ்டால் செய்திடவும்.


7. ரௌட்டர் அப்டேட்:

நீங்கள் பயன்படுத்தும் ரௌட்டரின் பதிப்பு என்ன என்று முதலில் தெரிந்து கொள்ளவும். பின்னர் அதனைத் தயாரித்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று, அதற்கான புரோகிராம் ஏதேனும் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என அறியவும். அவ்வாறு புதிய firmware தரப்பட்டிருந்தால், அதனைக் கொண்டு உங்கள் ரௌட்டரை அப்டேட் செய்திடவும்.மேலே தரப்பட்டுள்ள அனைத்து செயல்முறை வழிகளுக்குப் பின்னரும், உங்கள் வை-பி இணைப்பு சரியாகச் செயல்படவில்லை எனில், புதிய நெட்வொர்க்கிங் ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் தொகுப்பினை வாங்கி பயன்படுத்தவும்.


------------------- நன்றி -------------------

இங்குள்ள விளம்பரத்தினை தயவு செய்து ஒருமுறை கிளிக் செய்யவும்.எமது சேவையை மேலும் தொடர உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment